இந்தியா,ஓமான்,கென்யாவின் வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் முக்கிய சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை தரப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமான முறையில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்ட சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் தற்போதைய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அத்துடன் ஓமான் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல் புசைதி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆகியோருக்கு இடையில் நேற்று வெள்ளிக்கிழமை (06) தொலைபேசி வாயிலாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.

ஓமானில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு ஓமான் அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு அமைச்சர் இதன்போது நன்றியைத் தெரிவித்தார்.

ஓமானில் உள்ள இலங்கை பிரஜைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஓமான் அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என அமைச்சர் பத்ர் அல் புசைதி உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர் முஸாலியா முதவாடிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.