2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு முழுமையாக வெளியாகியிருந்தன. தமிழக அரசியல் வரலாற்றை மாற்றும் வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இறுதி முடிவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 74 இடங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு தற்போது 10 இடங்கள் குறைவாக உள்ளன.
இருப்பினும், சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தைத் தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்களுடைய இலங்கையில் உள்ள பிரதான கட்சி என்ற ரீதியில் சாதனை படைத்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழ் நாட்டு மக்களோடும் தமிழ் நாட்டு அரசுடனும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் வேலை செய்வதற்கு காத்திருக்கின்றோம் என்ற செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.



