அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் இராணுவ தளங்கள் மீது ஈரான் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் கண்ணுக்கு கண் அதாவது ‘பழிக்குப்பழி’ வாங்கும் தனது ராணுவ நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஈரான் தனது முதற்கட்ட நடவடிக்கையில் ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படை தளத்தைக் குறிவைத்து தாக்கியது. அங்குள்ள அமெரிக்காவின் பல ஆயுதக் கிடங்குகளும் எரிபொருள் நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. 2-வது கட்டமாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஷேக் ஈசா ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.



