அம்மணி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செம்மணி இனப்படுகொலை இடம்பெற்றது இன்று வரை 2026,யூலையில் 420, தமிழர்களின் எலும்புக்கூடுகள் சாட்சியங்களாக வெளிவருகிறது.
அதே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படு கொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. 1995.யூலை,09,ல். நிகழ்த்தப்பட்ட அந்த இனப்படுகொலையின் 31, வது ஆண்டு நினைவுநாள் கடந்த 2026, யூலை,09, நாளாகும்.
யாழ் மாவட்டத்தின் தென்மேற்கே சண்டிலிப்பாய் பிரதேசத்தில் நவாலிக்கிராமம் உள்ளது. 1995, யூலை,07, ல் இராணுவத்தினர் “முன்னேறிப்பாய்தல்” என்ற பெயரில் ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர். மக்களை பாதுகாப்பாக ஆலயங்களில் இருக்குமாறு அறிவித்தார்கள்.
சங்கானை, சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி, தொட்டி லடி, சீரணிச்சந்தி, சுழிபுரம், சித்தன்கேணி, இளவாலை, பண்டத்தரிப்பு, நாவாலி, ஆகிய பத்து கிராமங்களை சேர்ந்த ஏற்ககுறைய 2500, தமிழ் மக்கள் நாவாலி சென் பீற்றஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அந்த தேவாலயத்தை அண்டிய சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் முருகன் ஆலயத்திலும், தஞ்சம் அடைந் திருந்தனர்.
நவாலி தேவாலயத்தின்மீதும் சுற்றுவட்டத்திலும் இலங்கை அரசின் ‘புக்காரா’ போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், தேவாலயத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தஞ்சம் புகுந்திருந்த 153 வரையிலான அப்பாவித் தமிழ் பொதுமக்கள் சம்பவ இடத் திலேயே இனப்படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களையும், கண்ணில் பட்ட சடலங்களையும் பொதுமக்கள் யாழ் போதனாவைத்தி யசாலைக்கு எடுத்துச்சென்றனர். மூன்று தினங்களாக உயிரிழந்தவர்களின் உடலங்கள் எடுக்கப்பட்டன 1995, யூலை,11, ம் திகதியும் அடையாளம் காணமுடியாத 25, உடலங்கள் மீட்கப்பட்டன. இனப்படுகொலையின் மிலேச்சத்தனமான இரத்தக்களரியாக நாவாலி ஊர் காட்சி தந்தது.
பாதுகாப்பான இடம் என நம்பி தேவாலயத்திற்குள் தஞ்சம் அடைந்த குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் இந்த சம்பவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்தனர். அன்று 1995 யூலை மாதம் யாழ்ப்பாணம், நவாலி யிலுள்ள சென். பீற்றர்ஸ் மற்றும் போல் தேவாலயம், போரி லிருந்து பாதுகாக்கவும் அடைக்கலமும் தேடி இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு மற்றும் தற்காலிக கழிப்பறைகளை அமைத்தல் உள்ளிட்ட உதவிகளை தேவாலயத்தின் இளை ஞர் கழகம் உள்ளிட்ட நவாலியிலுள்ள மக்கள் வழங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில்த்தான் 1995,யூலை,09ஆம் திகதி, பிற்பகல் 4.30 , மணிதொடக்கம் 05.45, மணி வரை தேவாலயத் தைச் சூழவும், சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் ஸ்ரீ கதிர்காம முருகன் இந்து ஆலயம் மற்றும் அதன் அயற்புறங்களிலும் ‘புக்காரா’ விமானத்திலிருந்து 13 குண்டு கள் வீசப்பட்டன. அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.
யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காராவிமானம் தொடர்ச்சியாக மிலேச்சத்தனமாக 13 குண்டுகளை இரு ஆலயங்கள் மீதும் வீசியது. ஆலயமும் தேவாலயமும் இத்த்தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களுள் 04 வயது குழந்தை உட்பட மற்றும் முதியவர், பெண்கள், இளைஞர்ககள் என பலர் அடங்குவர். இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்காகவும் தொண்டர்களான இளை ஞர்களுக்காகவும் சமையலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி கிராம சேவையாளரும் கொல்லப்பட்டவர்களுள் அடங்குவார்.
கொல்லப்பட்டவர்களுள் அண்ணளவாக 45 பேர் நவாலி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் பக்கத்து கிராமங்களில் இருந்து அடைக்கலம் தேடி இடம்பெயர்ந்து நவாலிக்கு வருகை தந்தவர்களாவர். அன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்படவேயில்லை. தான் வீடு சென்றுபார்த்தபோது தனது 18 வயதான மகளின் சடலத்தின் கீழ் தனது உறவினரின் குழந்தை ஒன்றை உயிருடன் கண்டெடுத்தது எப்படி என்பதை பெண்ணொருவர் விபரித்தார். சில சடலங்கள் சில நாட்களின் பின்னரே மீட்கப்பட்டன. தலைகளற்ற சடலங்கள் நிலமெங்கும் பரந்து கிடந்தன. சில உடல்களின் தலைகள் மரத்தின் மீதிருந்து கண்டெடுக்கப்பட்டன. பல உடல்கள் அடையாளம் காணமு டியாதபடி கருகியிருந்தன. அன்றைய தினம் மாலை தான் யாழ்ப்பாணத்திலிருந்து நவாலி நோக்கி சைக்கிளில் பயணித்தபோது, சடலங்களும் அவற்றின் பாகங்களும் வீதியெங்கும் சிதறிக்கிடந்ததாக கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் விபரித்தார்.
ஆரம்பத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க பேராயர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியோரை மேற்கோள்காட்டி இக்குண்டுத்தாக்குதலில் 157, பேர் வரை கொல்லப்பட்டனர் , காயம் அடைந்தவர்கள் 150க்கு மேல் என்றும் அப்போது கூறப்பட்டது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம் பெயர்ந்தவர்கள் என்பதாலும் காயமடைந்த பலர் பின்னர் உயிரிழந்ததாலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாகும். எனது நண்பர் ஒருவரின் மாமியும் காயங்கள் காரணமாக பின்னர் உயிரிழந்தவர்களுள் அடங்குவார்.
மறுநாளும் (1995,யூலை.10) அதேபோன்று அதிக மான குண்டுகள் வீசப்பட்டதாகவும் அதில் ஆகக் குறை ந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்தது. குறித்த குண்டுகள் இலங்கை விமானப் படையினாலேயே வீசப் பட்டது. உயிர் இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்களில் “வான்வழி குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு” என காரணம் குறிப் பிடப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை அரசின் இனப் படுகொலை மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் 1995 காலப்பகுதியில் எந்தவொரு வேறு ஆயுதக் குழுவும் வான்வழி குண்டுத்தாக்குதல் நடாத்தும் விமானங்களைக் கொண்டிருக்கவில்லை. என்பதால் இதனை சர்வதேசம் கவனத்தில் கொண்டிருந்தும் இதுவரை அதற்கான நீதி இல்லாத படுகொலையாகவே பத்தோடு பதினொன்று என்பதைப்போல் நவாலி படுகொலையும் உள்ளது.
நவாலி குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கம் முதலில் இத்தாக்குதலை திட்டவட்டமாக மறுத்தது. எனினும், பின்னர் நிலைமையை உணர்ந்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது. பல ஆண்டுகள் கழித்து, இந்தத் தாக்குதலை விமானப்படை “தவறுதலாக” மேற் கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.
சந்திரிகா குமாரதுங்காவின் நிலைப்பாடு இச் சம்பவம் நடந்தபோது, அரசாங்கம் விமானப்படையின் தாக்கு தலை முதலில் மறுத்ததுடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இந்தத் தகவலை அரசாங்கத்திடம் முன்கூட்டியே கலந்தாலோசிக்காமல் உலக ஊடகங்களுக்கு வெளியிட்டது என்றும் விமர்சித்தது. தேவாலயம் அப்படியே இருப்பதாகவும், யாழ். ஆயரிடமிருந்து தகவல் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவரது நிர்வாகம் தெரிவித்தது.
தொடர்ந்து சர்வதேச அமைப்புகள் மற்றும் யாழ். பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் அழுத்தங் களைக் கொடுத்ததை அடுத்து, அரசாங்கம் இந்தத் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்துவதாக உறுதியளித்தது.
இந்த இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் கழித்து 2000, ம் ஆண்டுதான் நவாலி தேவாலயம் மீது விமானப்படை குண்டு வீசியது ஒரு “தவறு” என்று சந்திரிகா குமாரதுங்காவால் ஒப்புக்கொள்ளப்பட்டது. “தேவாலயம் விமானப்படையின் இலக்காக இருக்கவில்லை” என்றும், “சம்பவம் குறித்து அறிந்தபோது விமானப்படையைக் கடுமையாகக் கண்டித்தேன்” என்றும் அவர் 2000, ம் ஆண்டில் குறிப்பிட்டிருந்தார்.
ஶ்ரீலங்கா நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்திய பின்னர் ஜனாதிபதிகளாக பதவி ஏற்றவர்கள் நிறைவேற்றிய முக்கிய இனப்படு கொலைகள்.
ரணசிங்க பிரமதாச பிரதமராக இருந்த
1. ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா :1978 – 1989: வரை கொழும்பு, வெலிக்கடை இனப்படுகொலை, கொக்கட்டிச்சொலை இனப்படுகொலை.
2. ரணசிங்க பிரேமதாச 1989 – 1993, வரை வீரமுனை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை, மகிழடித்தீவு, இனப் படுகொலைகள் தொடக்கம் .சகல கிழக்குமாகாண இனப் படுகொலைகள்
3. டிங்கிரி பண்ட விஜேதுங்க 1993 – 1994, வரை சுண்டிக்குளம் இனப்படுகொலை
4. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 – 2005, வரை : செம்மணி இனப்படுகொலை. நவாலி தேவாலய இனப் படுகொலை.
5. மகிந்த ராஜபக்ச 2005 – 2015, வரை: தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் பலர், முள்ளிவாய்க்கால் இலட்சக்கணக்கானவர்கள் இனப்படு கொலை.
6. மைத்திரிபால சிறிசேன 2015 – 2019, வரை : ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் 265, பேர் உயிரிழப்பு.
7. கோத்தாபய ராஜபக்ச 2019 – 2022, வரை: அதிகரித்துவந்த கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தக் கோரியும், ஆரம்ப சுகாதார வசதிகளை வலியுறுத்தியும் மகரகம சிறை கைதிகள் மேற்கொண்ட போராட்டத்தின் மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 கைதிகள் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயமடைந்தனர். காலிமுகத்தி டல் அரகலிய போராட்டம்.
8. ரணில் விக்கிரமசிங்க 2022 – 2024, வரை: ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
9. அநுர குமார திசாநாயக்க 2024 தொடக்கம் தற்போது வரை : 2026, யூலை,05,06, நீர்கொழும்பு சிறையில் 27, படுகொலை.
2009, மே,18, க்கு பின்னர் இனப்படுகொலைகள் இடம் பெறாவிட்டாலும் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இன்று 2026, வரையும் 17, வருடங்களாக தொடர்கிறது.



