பசிலுக்கு சொந்தமானது என்று கூறப்படும் வீட்டை ஆக்கிரமித்த பல்கலைக்கழக மாணவர்கள்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மூன்றாவது நாளாகவும் தங்கியிருந்து தமது போராட்டத்தை இன்றும் (16) தொடர்கின்றனர்.

நேற்று (15) கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே, அவர்கள் மூன்றாவது நாளாகவும் அங்குத் தங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.

குறித்த இல்லத்தையும் அது அமைந்துள்ள காணியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட, மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஆடம்பர இல்லம், கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நீதிமன்ற நடவடிக்கை ஒன்றின் ஊடாக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையின் போது இந்த இல்லத்தின் உண்மையான உரிமையாளரை அடையாளம் காண முடியாமல் போன பின்னணியில், கடந்த ‘அரகலய’ போராட்டக் காலத்தில் இந்த இல்லம் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் நேற்று முன்தினம் (14) இந்த இல்லத்திற்குள் நுழைந்து அதனைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.