நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்வு

2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு குழு  அறிவித்தது. இதில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் அறிவித்தார்.

உலகம் முழுவதும்  பட்டினியை எதிர்த்துப் போராடியதற்காகவும், போர், உள்நாட்டுப் போர் நடக்கும் இடங்களில் அமைதியான சூழல் நிலவ அளித்த பங்களிப்பு, போர், பிரச்சினைக்குரிய இடங்களில் பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க 58 ஆண்டுகள் அயராத முயற்சிகள் மேற்கொண்டதால் இந்த அமைதிக்கான நோபல்பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன்  கூறுகையில்,“ போருக்கான ஆயுதமாக பசியை பயன்படுத்துவதைத் தடுக்க உலக உணவுத் திட்டம் பங்களிப்பை செய்துள்ளது.  வன்முறைகளுடன் கொரோனா பெருந்தொற்றும் ஏற்பட்டதால் ஏமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், பர்கினோ பசோ ஆகிய நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை உலக உணவுத் திட்டம் வழங்கியது. உணவு பாதுகாப்பு வழங்குவது என்பது, வறுமையைத் தடுப்பதுடன், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

உலக உணவு அமைப்புக்கு விருது வழங்குவதன் மூலம், பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் பக்கம் உலகின் பார்வை திருப்ப வேண்டும்.” என்றார்.

UN World Food Programme wins 2020 Nobel Peace Prize, as hunger mounts | WFP awarded 2020 Nobel Peace Prize for its efforts to combat hunger | UN News

கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும்  உலக உணவு திட்டம் பட்டினியால் வாடிய 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. உலகளவில் பட்டினியை ஒழிப்பது என்பது ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்காக கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக யேமன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, நைஜீரியா, தெற்கு சூடான், புர்கினபாசோ ஆகிய நாடுகளில் பசியோடு சேர்ந்து உள்நாட்டுப் போர் வன்முறையும் சேர்ந்து கொண்டது. இந்த காலகட்டத்தில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த பெருந்தொற்று காலத்தில்  உலக உணவு திட்டம் தன்னுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பட்டினியை போக்க முயன்றது. மருத்துவரீதியான தடுப்பூசி எங்களிடம் இருக்கும் நாள் வரை, குழப்பத்துக்கு சிறந்த தடுப்புமருந்து உணவுதான் என்று உலக உணவுத்திட்டம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த 1963-ம்ஆண்டு ஐநாவால் தொடங்கப்பட்ட  உலக உணவு திட்டம்,1965-ம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. இந்த உலக உணவுத் திட்டத்துக்கு பல்வேறு நாடுகளின் அரசுகளின் பங்களிப்பும், தனிநபர்கள், நிறுவனங்களும் நன்கொடை அளித்து பங்களிப்பு செய்கின்றன.

சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 93 நாடுகளைச் சேர்ந்த 9.3 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் பணியை  இந்த அமைப்பு செய்து வருகிறது. இந்த உலக உணவுத் திட்டத்தின் தலைமை அலுவலகம் ரோம் நகரிலும், அலுவலகங்கள் உலகளவில் 80 நாடுகளிலும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.