100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை மீட்டதற்காக இலங்கைக்கு ஐ.நா நன்றி தெரிவிப்பு

வடக்கு கடற்பரப்பில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை மீட்டமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

மியான்மரில் மனித உரிமைகள் நிலை தொடர்பில் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் தோமஸ் எண்ட்ரூஸ், பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை மீட்கும் தலையீட்டிற்கு முழு மனதுடன் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை, ஏராளமான குழந்தைகள் உட்பட 105 ரோஹிங்கியாக்களை ஏற்றிச் சென்ற ஒரு இழுவை படகைகளை மீட்டனர்.

மியன்மாரில் இருந்து இந்தோனேஷியாவுக்குக் குழுவை ஏற்றிச் சென்ற போது படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இவ்வனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (18) வெத்தலகேணிக்கு வடக்கே 3.5 கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கை கடற்பரப்பில் படகில் இருந்த மியன்மார் பிரஜைகளை மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தோமஸ் எண்ட்ரூஸ் கூறுகையில்,

சமீப வாரங்களில் ரோஹிங்கியாக்கள் அதிகளவில் ஆபத்தான கடல் மற்றும் தரை வழிகளை பயன்படுத்துகின்றனர், இது மியான்மர் மற்றும் பிராந்தியத்தில் ரோஹிங்கியாக்கள் அனுபவித்த விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற உணர்வை எடுத்துக் காட்டுகிறது.

எனவே, வெளியேறும் ரோஹிங்கியா அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிராந்திய அரசாங்கங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.