48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு யுக்ரேன் அழைப்பு

48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை

தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி 48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த  ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பு நாடுகளை யுக்ரேன் அழைத்துள்ளது.

எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் தாங்கள் அலுவல்பூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷ்யா புறக்கணித்துவிட்டதாகவும், யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் திட்டத்தில் ‘வெளிப்படைத்தன்மைக்காக’ அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்நாட்டுடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பதே “அடுத்த நடவடிக்கை” என அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் எல்லையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.