தென் கொரியாவின் திரைப்படத்தைப் பார்த்ததாக இரு சிறுவர்கள் சுட்டுக் கொலை

தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்ததற்காக தனது நாட்டுச் சிறுவர்கள் இருவரை பொதுமக்கள் முன்னிலையில் வட கொரியா சுட்டு வீழ்த்திய தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா, தென் கொரிய சர்ச்சை கொரிய போர் முடிவுக்கு வந்தும் முடியாமல் தொடர்கிறது. இருநாடுகளும் இரு துருவங்களாக செயல்படுகின்றன.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வட கொரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். இதற்குத் தண்டனையாக அந்த இரு சிறார்களும் ஹைசான் விமானப்படை தளத்தில் மக்கள் முன்னிலையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையில், “தென் கொரிய நாட்டின் திரைப்படங்களை, நாடகங்களை பார்ப்பவர்கள், பரப்புபவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வட கொரியா தம் மக்களுக்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வெடிகுண்டு, துப்பாக்கி, செயற்கைக்கோள் என்றெல்லாம் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியாக செய்திகள் வெளியாகி இருந்தமை  குறிப்பிடத்தக்கது.