இந்தோனேசியாவில் திருமணம் மீறிய பாலுறவு இனி தண்டனைக்குரிய குற்றம்

திருமணத்தை மீறிய பாலுறவு வைத்துக் கொண்டால்  ஓராண்டு வரை சிறைத் தண்டனை  வழங்கப்படும் என  இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் பெரும் இழப்பு ஏற்படக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. காரணம், இந்தச் சட்டம் இந்தோனேசியர்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும்  திருமணமாகாதவர்கள் இணைந்து வாழவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அதிபர், அரசு அமைப்புகளின் தலைவர்களை அவமதித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தேசத்துக்கு எதிராக கருத்தியலை பரப்புபவர்கள், அறிவிப்பு இல்லாமல் போராட்டங்களை நடத்துபவர்கள் மீதும் புதிய தண்டனைகளை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசிய அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்தே இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சட்ட மசோதாக்கள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு உடனடியாக அமலுக்கு வராது. அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய ஏதுவாக இந்தக் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என   அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தை தாண்டிய பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக்கியிருந்தாலும், திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவை இந்தோனேசியா தடை செய்யவில்லை.

இது குறித்து இந்தோனேசிய சுற்றுலா துறை துணைத் தலைவர் மவுலானா யுஸ்ரான் கூறுகையில், “கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் பொருளாதாரமும், சுற்றுலாவும் மீண்டு வரும் சூழலில் இதுபோன்ற கோட்பாடுகள் முற்றிலும் வளர்ச்சிக்கு எதிரானதாக இருக்கும். அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக வேதனைப்படுகிறேன். அரசாங்கத்திற்கு இது குறித்து எடுத்துக் கூறியுள்ளோம்” என்றார்.