தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி

‘பட்டலந்தவில் ஆர்வம் காட்டும் ஜே.வி.பியினர் ஏனைய விடயங்களிலும் இதே ஆர்வத்தை காட்டவேண்டும்’என்று மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார்
‘பட்டலந்த அறிக்கையை போன்று ஏனைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் பின்னர் அந்த அறிக்கையை தான் நிராகரிப்பது தொடர்பாகவும் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிற்கு அறிவித்திருக்கின்றார்’.
‘எனினும் டக்ளஸ் பீரிசிற்கு இந்த கொலைகளிற்காக வழங்கப்பட்ட பதவி உயர்வுகள், போலி கடவுச்சீட்டுகள் என்பன பற்றி அனைவரும் அறிந்ததே. இவை அனைத்திற்கும் பின்னால் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு உள்ளதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன’ என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

‘இந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப சரியான தண்டனைகளை மனிதர்களை கொலை செய்த குற்றத்திற்காகவும் துன்புறுத்தி சித்திரவதை செய்த குற்றத்திற்காகவும் இவர்களிற்கு வழங்கியே ஆகவேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இதற்கு அப்பால் சென்று இன்னுமொரு விடயத்தை நாங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்’.
‘குறிப்பாக தமிழ் மக்களிற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் அரச ஆதரவுடன்1983 இல் இடம்பெற்ற கலவரம், வெலிக்கடையில் இடம்பெற்ற சிறைச்சாலை கொலை, திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் கொலை, திருகோணமலையில் இடம்பெற்ற 17 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் கொலை, செஞ்சோலையில் இடம்பெற்ற அப்பாவி சிறுவர்களின் கொலை, அதன் பின்னர் இறுதி யுத்தத்திலே சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை, இசைப்பிரியா உட்பட பல பெண்கள் சிரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை, செம்மணி புதைகுழி தொடர்பான நிலைமை போன்ற பல உள்ளன.
‘இவை அனைத்திற்கும் இலங்கையின் முப்படை தளபதிகளாகயிருந்த ஜனாதிபதிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை இங்கு இருக்கின்றது’.

‘இவைஅனைத்திற்கும் ஆணைக்குழுக்கள் இருக்கின்றனவா என்பது தெரியாது. ‘சிலவற்றிற்கு ஆணைக்குழுக்களை நியமித்திருந்தார்கள் அவற்றின் அறிக்கை எங்கே என்று தெரியாது’.
‘எனவே பட்டலந்த அறிக்கையை சமர்ப்பிப்பது போல ஏனைய கொலைகள் போன்றவற்றிற்கும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது’ என்று மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.