விமர்சனத்துக்கு மத்தியில் சீனாவின் முக்கிய அதிகாரி இலங்கை வருகை

டித்வா சூறாவளியால் பேரிழப்பை சந்தித்துள்ள இலங்கைக்கு உதவிகளை வழங்கும் வகையில் சீனா உயர்மட்ட தலைவர் ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்திய போதும் சீனா பின்தங்கிய நிலையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கடந்த 11ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் அடுத்தவாரம் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதி உயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி ( Zhao Leji) இரண்டு நாள்கள் பயணமாக எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.

அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  அதேவேளை, நாட்டிற்கான எதிர்கால சீன உதவிகள் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.