‘சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டிய காலம்’- அருட்தந்தை மா. சத்திவேல்

474 Views

விழிப்போடு செயல்பட வேண்டிய காலம்

தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலம் இது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும். என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அண்மையில் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புலம்பெயர் சமூகத்தை தமிழர் பிரச்சினை தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார். இது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதும், பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடிக்கும் மற்றும் சர்வதேச அழுத்த சக்திகளை அமைதி கொள்ளச் செய்வதுமான நரி செயலுமாகும்.

சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழ் தலைவர்களோடு கடந்த காலத்தில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தையும் கிழித்ததோடு, விடுதலை இயக்கங்களோடு நடாத்தப்பட்ட திம்பு பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டு, யுத்தம் திணிக்கப்பட்டு சர்வதேச மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமல்ல தமிழ் ஈழ விடுதலை புலிகளோடு செய்துகொண்ட இடைக்கால உடன்படிக்கை ஏற்பாடுகளும் நிறைவேறாததன் காரணமாகவே அவலங்களை சந்தித்தவர்கள், உயிர் பாதுகாப்பு தேடியவர்கள் நாட்டை விட்டு புலம்பெயரும் நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் சர்வதேச சமூகத்தை கொடுத்த 13 பிளஸ் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை அதுமட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை, இருப்பது அபிவிருத்தி பிரச்சினை என தேர்தல் மேடைகளில் கூறி தானே உண்மையான தேசப்பற்றாளனும் பௌத்தனுமாவேன் என அடையாளப்படுத்திய பின்னர் எந்த நம்பிக்கையில் புலம்பெயர் சமூகம் பேச்சு வார்த்தைக்கு வரும்.

தற்போதைய ஜனாதிபதியையும், ஆட்சியாளர்களையும் பதவிக்கு அமர்த்திய மக்களே வெறுப்படைந்து இருக்கின்ற நிலையிலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அடுத்த ஜனாதிபதி பதவிக் காலமும் எனக்கும் வேண்டும் என்றவர் அந்தத் தேர்தலை சந்திப்பதற்கான வியூகமாகவே பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடிக்கவும், புலம்பெயர் சமூகத்துக்கு ஊடாக தாயக தமிழர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அவர்களுடைய வாக்குகளை தமதாக்கவும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு மரண சான்றிதழ் என சர்வதேசத்தின் முன்னாள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர் யுத்த குற்றங்கள் மனிதகுலம் அங்கீகரிக்காத குற்றங்களையும் ஏற்று பகிரங்க மன்னிப்பு கேட்காத யுத்த குற்றவாளிகளின் அழைப்புக்களை ஏற்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.

தியாகி திலீபனின் ஐந்து அம்ச நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாது கொலை செய்தவர்கள், யுத்தம் முடிவுற்றது என்று அவர்களே அறிவித்துவிட்டு படை முகாம்களை அகற்றாது, மாவலி எல் வலயம் என புதிய குடியேற்றங்களை ஏற்படுத்த முனைவதோடு, தொல்பொருளியல் திணைக்களத்தோடு பேரினவாத பௌத்த துறவிகளை சுதந்திரமாக தமிழ்ப் பிரதேசங்களில் நடமாட இடமளித்து தமிழர்களின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கையகப்படுத்திக் கொண்டு புலம் பெயர்ந்துள்ள சமூகத்தை பேச்சு வார்த்தைக்கு அழைப்பது சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவே.

இதில் இன்னுமொரு அபாயமும் உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தில் தனக்கு வேண்டியவர்களை அழைத்து சர்வதேச புவிசார் அரசியலை முன்னெடுக்கவும் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்ற முனைவதாகவே தோன்றுகின்றது. இதனூடாக தமிழர்களையும் தமிழ் தேசத்தையும் சிதைக்கவும் புதிய உத்தியாகவே இந்த அழைப்பு எனக் கூறலாம். தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலமிது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும்.

அந்த அழிவுக்கு காரணமானவர்கள் என நாம் நம்முடைய சரித்திரத்தில் பயப்படுவோம். இத்தகைய அவல நிலையை நீக்க தாயகம் மீது தணகயாத தாகம் கொண்ட அனைத்து சக்திகளும் தமிழ் தேசத்தையும் தேசியத்தையும் பாதுகாக்க ஒன்று சேர வேண்டும் அதுவே காலத்தின் கட்டாயமாகும். பச்சோந்திகளையும் அடையாளம் கண்டு சமூக நீக்கம் செய்வதும் காலக்கடனே” என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply