மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்- மட்டக்களப்பில் போராட்டம்

பெண்கள்,சமூக சிவில் செயற்பாட்டாளர்கள்,சிவில் அமைப்புப் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

வடகிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கண்டுமணி-லவகுசராசாவின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றிய தலைவர் சபாரெத்தினம் சிவயோகநாதன்,மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பெண்கள்,பாதிக்கப்பட்ட மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்,மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும், தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும்,அவர்களை பின்தொடர்வதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவ்வேளையில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்கள்,ஊடகவியலாளர்கள்,மற்றும் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.