02. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குறித்த காணியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் படையினர் ஏமாற்றும் விதமாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக பழைய கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வடமராட்சியில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம் உறுதியளித்திருந்தார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் வைத்து நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில் பருத்தித்துறை அஞ்சல் அலுவலக வளாகம் மற்றும் கட்டடத்தை விடுவிக்காது தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டு அதற்கு அருகாமையில் உள்ள சிறிய நிலப்பரப்பினை வழங்க படைத்தரப்பு திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமது கள விஜயத்தின் போது குறித்த ஏமாற்று அம்பலமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இடத்தில் அஞ்சல் அலுவலகத்தை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அஞ்சல் நிலைய கட்டடத்தை அமைக்க முடியாது என்று தொடர்புடைய அஞ்சல் நிலைய கட்டுமான பொறியியல் துறை தரப்பினரால் கூறப்பட்டிருப்பதாகவும், பொருத்தமற்ற சிறய இடத்தை விடுவிக்கவே இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பருத்தித்துறை அஞ்சல் நிலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை அஞ்சல் நிலைய காணி விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் மக்களின் காணிகள் மக்களுக்கே என தேசிய மக்கள் சக்தி தரப்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் செயற்பாட்டில் அதனை நடைமுறைப்படுத்த இதுவரை எதையும் செய்யவில்லை. மாறாக மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்பட்டு வருகிறது.
தனியார் காணிகள் மற்றும் அரச காணிகள் என எதனையும் விடுவிக்க இந்த அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காணி விடுவிப்பு நிலவரங்கள் தொடர்பில் அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



