தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் இல்லை-சாணக்கியன்

231 Views

CG 793d438d 0image story தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் இல்லை-சாணக்கியன்

தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் இல்லை, இதைப் பற்றியெல்லாம்  கேட்கப் போனால் நாங்கள் குழப்பவாதிகள் என்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்ட விடயங்கள் தொடர்பில் இரா.சாணக்கியன் கருத்துத் தெரிவிக்கையில், “மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு தீர்வில்லை, கெவிலியாமடு பிரச்சினைக்குத் தீர்மானமில்லை, மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் காணிக்கு அம்பாறை அரச அதிபரின் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது தொடர்பில் எவ்வித கருத்தும் இல்லை. திவுலபொத்தான என்று புதிதாக கிராமத்தை உள்வாங்குமாறு ஆளுநர் கொடுக்கும் அழுத்தம் தொடர்பில் எந்தக் கருத்தும் இல்லை. இது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரை யாடப்பட்டன.

மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற் தரையிலே நீதிமன்றத்தால் கொடுத்த தடையுத்தரவை மீறி கிழக்கு மாகாண ஆளுநரின் பின்புலத்தில் மீண்டும் 2021ம் ஆண்டு பெரும் போகத்திற்கு விவசாயம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பில் நாங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்குத் தெரியப் படுத்தினோம். நீதிமன்றத் தடையுத்தரவை வைத்து இதனை காவல் துறையினருக்கு அறிவித்து ஏன் தடுக்க முடியாது? என்று கேட்டிருந்தோம்.  அதற்கு ஒழுங்கான பதில் வழங்கப் படவில்லை.

ஏன், இவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் முட்டி மோத மாட்டார்கள். நமது பண்ணை யாளர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யவும் முன்வர மாட்டார்கள்.

கெவிலியாமடு பிரதேசத்திலே வன இலாகாவிற்குச் சொந்தமான காணியில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் மரமுந்திரிகைச் செய்கை இடம் பெறுகின்றது. இது தொடர்பில் நாங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்த போது வன இலாகாவிற்கு எவ்வித முறைப்பாடுகளும் கொடுக்கப் படவில்லை என்று தெரிவித் திருந்தனர். எனவே இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்து சட்டத்தை நடைமுறைப் படுத்தச் சொல்லி வன இலாகாவிற்குத் தெரிவித்தால் அவர்கள் அதனைத் தடுத்து நிறுத்த முடியும். இந்த விடயத்திற்கும் எவ்வித பதிலும் இல்லை.

நமது மாவட்டத்தின் எல்லையிலே கடந்த ஆட்சியின் போது கட்டப்பட்டு பூரணப் படுத்தப்படாத நிலையில் உள்ள வீடுகளைப் பூரணப் படுத்தித் தருமாறு உரிய அமைச்சரிடம் கேட்ட போது அதனை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லியிருந்தார். ஆனால் புதிதாக 500 வீடுகள் வரப்போகின்றன அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார். எமது மாவட்டத்திற்கு வீட்டுத் திட்டம் வந்தால் நாங்கள் ஏன் அதனை எதிர்க்கப் போகின்றோம். ஆனால் பிறகு விசாரித்த போது அவ்வீட்டுத் திட்டம் தேசிய இனவிகிதாசார அடிப்படையில் கொடுக்கப் போவதாக உத்தேசிக்கப் பட்டுள்ளதாக அறிகின்றோம். இதன்படி பார்த்தால் 350க்கும் மேற்பட்ட வீடுகள் பெரும்பான்மை மக்களுக்கே சேரும். எனவே இவ்வீட்டுத் திட்டத்தை செய்யாமல் பூரணப் படுத்தப்படாமல் இருக்கும் விடுகளைப் பூரணப் படுத்தித் தாருங்கள் என்ற தீர்மானம் ஒன்றை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுப்போம் என்று தெரிவித்தால் நாங்கள் அரசியலுக்காகச் சொல்லும் விடயம் என்று சொல்லி தட்டிக் கழிக்கப் படுகின்றது.

மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் கித்துாள் பிரதேசத்தில் இருக்கும் மேய்ச்சற்தரைக் காணிக்குள் இராணுவத்தினரின் சூட்டுப் பயிற்சிக்காக காணியை வழங்கி யிருக்கின்றார்கள். இதனை நாங்கள் கேட்ட போது மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அப்பிரதேசத்தில் 75 வீதமான காணி அம்பாறைக்குரியதும், 25 வீதமான காணியே மட்டக்களப்பிற்குரியது என்பதனால் அவர்கள் அனுமதி கொடுத்திருக் கின்றார்கள் என்று.

இப்பிரதேசமானது அம்பாறையில் இருந்து சுமார் 03 கிலோ மீட்டார்கள் எமது எல்லைக்குள் இருப்பது. எனவே எமது மாவட்ட எல்லைக்குள் வருகின்ற விடயத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி கொடுத்தால், இதனை நாங்கள் எற்றுக் கொள்வோமாக இருந்தால் இனிவரும் காலங்களில் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் அம்பாறை மாவட்டத்திற்குச் சொந்தமானது என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சொன்னால் கூட நாங்கள் எதுவுமே செய்ய முடியாத நிலை உருவாகும்.

நாங்கள் மாவட்டத்திற்குள் மட்டக்களப்பு எறாவூர், காத்தான்குடி ஆரயம்பதி, கிரான்குளம் குருக்கள்மடம் என்று எங்கள் எல்லைகளில் பேச்சர்ஸ் கணக்கில் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக் கின்றோம். ஆனால் அங்கு எமது மாவட்ட எல்லையில் 03 கிலோமீட்டர் மட்டக்களப்பு மாவட்ட காணிக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியிருக்கின்றார்.

இது தொடர்பில் நாங்கள் தெரிவிக்கும் போது அபிவிருத்திக் குழுத் தலைவர் அந்த அனுமதியை எங்களிடம் கேட்கின்றார். நாங்கள் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுகின்றோம்.

கிழக்கு மாகாண ஆளுநர் அரச அதிகாரிகளுக்கு அழைப்பெடுத்து திவுலபொத்தான என்ற கிராமம் இருக்கின்றதாகவும், அதனை நிர்வாக அலகிற்குள் சேர்க்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கின்றார். மட்டக்களப்பிலேயே இல்லாத ஒரு ஊரின் பெயர் இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதாகச் சொல்லி உள்வாங்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார்கள்.

1994ம் ஆண்டு தான் பதியத்தலாவ, தெஹியத்தகண்டிய போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் பொலனறுவை மாவட்டத்தில் இருந்தும், பதுளை மாவட்டத்திலிருந்தும் அம்பாறையில் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. அதுவரையில் அம்பாறையில் இருந்து ஒரேயொரு பெரும்பான்மை பாராளுன்ற உறுப்பினர்தான் தெரிவு செய்யப்பட்டார். ஆனால், இன்று நான்கு உறுப்பினர்கள் அங்கு தெரிவு செய்யப் படுகின்றார்கள். மேலுமொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் அம்பறை மாவட்டத்திலிருந்து உருவாக்க முடியாமல் இன்றுரை திண்டாடிக் கொண்டிருக் கின்றோம்.

இதே நிலைமைதான் திருகோணமலையிலும் இடம் பெறுகின்றது. அங்கும் எமது விகிதாசாரங்கள் குறைந்து கொண்டு வருகின்றது.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்று சமூகத்தையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் தான் இவையெல்லாம் செயற்படுத்தப் படுகின்றன.

இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போனால் நாங்கள் குழப்பவாதிகள் என்கிறார்கள்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply