உள்ளூராட்சி தேர்தலை நடத்த சட்டரீதியாக தடையில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர். இந்த சந்திப்பின்போதே, தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு, சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் தடவை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (பெஃப்ரல்) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கும் போதே தேர்தல் நடத்தப்பட உள்ளமையால், உள்ளூராட்சி அமைப்புகளின் வளங்களை, குறிப்பாக வாகனங்கள் உட்பட்ட வசதிகளைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.