ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது – குருசாமி சுரேந்திரன் – இறுதிப் பகுதி

ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம்

ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது

தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருப்பது இதுதான் முதல் முறை என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே அது நோக்கப்படுகின்றது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.  இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்வதில் முக்கிய பங்காற்றியது ரெலோ – அதாவது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தான். இந்தச் சந்திப்பின் நோக்கம். அது குறித்த முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் உயிரோடை தமிழ் வானொலியின்  தாயகக் களம் நிகழ்வில் ‘ரெலோ’ அமைப்பின் தேசிய அமைப்பாளரும் அதன் பேச்சாளருமான சுரேந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வியின் இறுதிப் பகுதியை இங்கே தருகின்றோம்.

கேள்வி –  தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா இந்தச் சந்திப்பில் பங்கேற்பார் என முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தமிழரசுக் கட்சி இதில் பங்கேற்காமைக்கு காரணம் என்ன?

பதில் – கடந்த 23ஆம் திகதி நடந்த கூட்டத்திலே தமிழரசுக் கட்சியிடம்  2ஆம் திகதி நாங்கள் கூடி இது சம்பந்தமாகக் கலந்துரையாடி ஒரு உறுதியான முடிவை எட்ட வேண்டும். இந்தியாவைக் கோர வேண்டும்  என்ற ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எட்டியிருந்தோம். அந்தக் கூட்டத்திலே மாவை சேனாதிராஜா அவர்கள் சுகயீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. ஆனால் கூட்டத்தை நடத்தி விட்டு, கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்.  அதன் பின்னர் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் இது ஒரு நல்ல விடயம். முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம். நாங்கள் இதை வாழ்த்துகிறோம். நீங்கள் இதை முன்னெடுங்கள். கட்டாயம் இந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வோம் என உறுதிமொழி சொல்லப்பட்டது.

அதற்கு இரண்டு நாட்களின் பின்னர்  கொழும்பிலே சம்பந்தன் ஐயா அவர்களை சந்தித்து எங்கள் அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், இந்தக் கூட்டத்திற்கு அவரே தலைமை தாங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அவர் அதற்கு இணங்கியிருந்தார். இந்த விடயம் இன்றைய காலத்தின் தேவை. மிக அவசியமான விடயம். இதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இதை யார் முன்னெடுத்தாலும் தலைமை தாங்க நான் விருப்பப்படுகிறேன். ஆனால் போக்குவரத்து சிரமங்கள் இருப்பதனாலே இணையவழி ஊடாக நான் தலைமை தாங்குகிறேன் என்று உறுதி மொழி வழங்கியிருந்தார்.

அதன் பின்னரே 2ஆம் திகதிக்கான கூட்டத்தை நாங்கள் உறுதி செய்து கொண்டு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்களையும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திரு ரவூப் ஹக்கீம் அவர்களையும்  அழைப்பதையும் திரு சம்பந்தன் அவர்களுக்குத் தெரிவித்திருந்தோம். அவரும் அதை வரவேற்றிருந்தார். அதன் பின்னர் இந்த நிகழ்வை நடத்துவதற்குத் தீர்மானித்து எல்லா விடயங்களும் முடிவுற்ற நிலையிலே, ஒரு பத்திரிகை ஊடாக நாங்கள் அறிந்திருந்தோம். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு  கூறியதாகவும், தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளாது என்றும் அறிந்திருந்தோம். ஆனால் அந்தப் பத்திரிகையில் வருகின்ற செய்திகள் உறுதியற்றதாக இருந்ததனாலே, அதில் ஒரு செய்தி வரும், ஆனால் நடப்பது வேறாக இருக்கும். எனவே அந்த செய்தி உறுதித்தன்மை அற்றது என்பதனாலே நாங்கள் அதை பெரிய விடயமாகக் கருதவில்லை.   ஆனால் அடுத்தநாள் வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளில் மாவை. சேனாதிராஜா கலந்து கொள்ள மாட்டார்.

தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளாது என்ற கருத்துக்கள் வந்த பொழுது, அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, கட்சி அப்படியொரு முடிவு எடுத்திருக்கிறது. கலந்து கொள்ள முடியாது என்று கூறியிருந்தனர். அதற்கு நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்கள் திட்டமிட்டபடி இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவையில் இருக்கிறோம் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தோம். பின்னர் சம்பந்தன் ஐயா ஞாயிற்றுக் கிழமை தொடர்பு கொண்டு, இந்தக் கூட்டத்தைப் பிற்போட முடியுமா என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சொல்லியிருந்தார். இது நாங்கள் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்ட கூட்டம். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருப்பவர்கள் இரண்டு நாள் வேலைகளை ஒத்திவைத்துத் தான் வரப்போகிறார்கள். எனவே அவர்களை நாங்கள் முகஞ்சுழிக்க வைக்க முடியாது. உங்களுடைய கரிசனைகளை நாங்கள் பரிசீலிப்போம். கதவுகள் திறந்திருக்கின்றது. நீங்கள் வரலாம் என்று தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் திங்கட்கிழமை மாவை. சேனாதிராஜா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். தாங்கள் கலந்து கொள்ள தங்களுக்கு விருப்பம் இருப்பதாகவும், கலந்து கொள்ளவில்லை என்ற தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும், ஆனால் தங்கள் மத்தியகுழு கூடவிருப்பதனாலே தங்களுக்கு கால அவகாசம் வழங்குமாறு தாங்கள் கோரியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.  எனவே காலம் கடந்து விட்டது. அடுத்த நாள் நாங்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். திட்டமிட்டபடி அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. தமிழரசுக் கட்சி அடுத்தடுத்த காலங்களில் கலந்து கொள்ளலாம் என்ற ஒரு நிலைப்பாட்டை எட்டப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப் பட்டதனாலே, முடிவுகள் எட்டப்பட்டிருந்தாலும், அதை நாங்கள் நடைமுறைப் படுத்துவதற்கு மீண்டும் ஒருவார காலத்திற்குள் கொழும்பிலே சந்தித்து, இது சம்பந்தமான நடைமுறைப்படுத்தலுக்கான தீர்மானங்களை மேற்கொள் வதற்கான தீர்மானம் இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்டிருக்கின்றது.

கேள்வி – கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இதில் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் என்ன?  நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா?

பதில் – ஆரம்பத்திலே இது தொடர்பாக அவர்களுடன் பேசிய பொழுது, ஒருமித்த நிலைப்பாட்டிலே கட்சிகள் பயணிக்க வேண்டும் என்று கூறிய பொழுதுகூட (13இன் அடிப்படையில் அல்ல) அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை. அவர்கள் நிராகரித்திருந்தார்கள். எனவே ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டும். வேண்டிய அவசியம் ஒன்று இருக்கின்றது என்று தெரிவித்தும், அவர்கள் அதற்கான சரியான காரணங்களைச் சொல்லவில்லை. அவர்கள் கலந்து கொள்ள வில்லை.  இந்தக் கூட்டத்திலே அவர்களுக்கு அழைப்பு விடுவதென்பது, பிரயோசன மற்ற விடயமாகவே நாங்கள் கருதியதால், அவர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை. அழைப்பு விடுக்காமல் இருந்தாலும்கூட எங்களுடைய முயற்சியை அவர்கள் விமர்சித்திருப்பதன் மூலம் அவர்கள் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

அவர்களை நாங்கள் அழைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும்கூட, அவர்கள் இப்படியான குழப்பகரமான கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என்ற நிலையிலே, நாங்கள் அவர்களை அழைக்காத இந்த விடயத்தைக்கூட, அவர்களை அழைத்ததாக நினைத்துக் கொண்டு, அவர்கள் கருத்துத் தெரிவித்ததன் மூலம் அவர்களும் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அடுத்த முறையும் நாங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியை எடுக்க வேண்டுமென்று, நாங்களும் கருதுகிறோம்.

கேள்வி –  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி என்பவற்றின் தலைவர்களும் இதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.  அதற்கு காரணம் என்ன?

பதில் – குறிப்பாக பன்முகப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய இனங்கள் தமிழ் பேசுகிறோம் என்பதற்காக இனங்களின் மீதான அடக்குமுறையைத் தான் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. முஸ்லிம் மக்களும் பாரிய சிக்கலுக்குள் இன்று அகப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய இனத்தோடு தொடர்ந்து பயணிப்பது தான் தங்களுக்கு பலமாக இருக்கும் என்ற விடயத்தை இப்போது அவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டம் வந்த பொழுது அது தமிழர்களுக்கே இன்னலாக இருந்தது. இன்று அதே சட்டம் தங்களுக்கும் ஒரு பூதாகரமான பிரச்சினையாக வந்திருப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.   கிழக்கு மாகாணத்திலே, குறிப்பாக காணி அபகரிப்பின் மூலம், திட்டமிட்ட குடியேற்றம் மூலம் தமிழினம் மாத்திரமல்ல, முஸ்லிம் மக்களின் இருப்பும் சிதைக்கப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

அதேபோன்று தேர்தல் முறைகளிலே கொண்டு வரப்படுகின்ற விடயங்களினால், மலையக மக்களினுடைய பிரதிநிதித்துவம் முற்றாக அடிபட்டுப் போகின்ற அபாயம் இருக்கின்றது. அதேபோன்று முஸ்லிம் மக்களினுடைய இனம் வடக்குக் கிழக்கிற்கு வெளியே பரந்து வாழ்கின்ற ஒரு இனமாக இருப்பதனாலே அவர்களின் பிரதிநிதித்துவம் இல்லாது போகின்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

இவற்றை ஒரு இனஅழிப்பு நடவடிக்கையாக அவர்கள் கருதுவதாலே, காலத்தின் தேவை கருதி, அவர்களையும் எங்களுடன் இணைய வேண்டிய, 13இற்குரிய ஆதரவை அவர்களும் வலியுறுத்தியிருந்த வகையிலே பன்முகப்படுத்தப்பட்ட தமிழ் பேசும் இனமாக நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற வகையிலே அவர்களையும் நாங்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைத்து, ஒருசேரக் கைகோர்த்து, தமிழ் பேசும் இனமாக இந்த அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே அவர்களை அழைத்து இந்தக் கூட்டத்தை மேற் கொண்டிருந்தோம்.

கேள்வி – இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சந்திப்பதாக தீர்மானித்துள்ளீர்கள். இதில் எவ்வாறான செயற்பாட்டை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் – இரண்டாவது சந்திப்பிலே குறிப்பாக தமிழரசுக் கட்சி இதைப் பின்போடு மாறும், தாங்கள் கலந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாட்டை எட்டியிருப்பதாகவும், ,  தாங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டை அரசியல் குழுக் கூட்டத்திலே எடுக்கவில்லை என்றும்  இந்த செய்திகள் பொய்யானது என்று அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்ததினாலே தமிழரசுக் கட்சியின் தலைவர்களையும் கலந்து கொள்ளுமாறும், அவர்களுடைய பங்களிப்பைக் கோருவதாகவும், அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் தொடர்ந்து பத்திரிகைகளிலே இதைப் பற்றி அறிக்கையிட்டு, அக்கறையோடு இதைப் பற்றி விமர்சனங்கள் முன்வைத்து வருவதனாலே, நாங்கள் அவர்களுக்கும் ஒரு விருப்பம் இருப்பதாக நாங்கள் உணரக்கூடியதாக இருக்கிறது.

ஆகவே அவர்களுடைய பங்களிப்பையும் நாங்கள் இதில் ஒருங்கமைத்து, கொழும்பிலே நாங்கள் கூடி, தமிழ்த் தேசிய தலைமைகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி, நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிலே எந்தளவிற்கு அரசியல் நகர்வினை வெற்றிகரமாக நகர்த்த முடியும் என்பதைக் கலந்தாலோ சிப்பதற்காகவும், நடைமுறைப் படுத்துவதற்காகவும் பின்போடப்பட்டிருக்கிறது. அது வெற்றிகரமாக நகரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

கேள்வி –  உங்களுடைய கோரிக்கை தொடர்பில் இந்தியத் தரப்பு எவ்வாறான நகர்வை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் – இன்று அரசியல் சூழ்நிலைகள், பூகோள அரசியல் சூழ்நிலைகள் மாற்றமடைந் திருக்கின்றன. ஆகவே இந்தியா ஒரு அரசியல் ரீதியான ஒரு நகர்வினைத்தான் மேற்கொள்ள முடியும். எங்களுடைய இந்தக் கோரிக்கைகளின் மூலம் நிச்சயமாக இந்தியாக இலங்கை அரசாங்கத்தை இந்தப் 13ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதன் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை சம்பந்தமாக தலையிடக் கூடிய ஒரு ஏற்பாடு இருப்பதனாலே, அதன் அடிப்படையில் நாங்கள் கோருகின்ற போது, இந்திய அரசியல் பிரதிநிதிகள், இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தோடு, அரசியல் யாப்பு விடயம் சம்பந்தமாக அல்லது மாகாணசபை முறைமைகள் சம்பந்தமாக நடைமுறைப்படுத்தி, இப்போது மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அது வெறும் கண்துடைப்பாகப் போகாமல், பலமிழந்த மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், காத்திரமான அதிகாரக் கொள்கைகள் ஊடு முற்றுமுழுதாக 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தல் வருவதற்கு, இந்திய அரசியல் பிரதிநிதிகள் வலியுறுத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஏனென்னால், 13ஆம் திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தப்படாமல் வெறுமையான மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள்  தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக ஆரம்பித்திருக் கின்றனர். குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தாங்கள் தேர்தலில் போட்டியிட்டு, இந்த மாகாணசபை முறைமைகளில் அதிகாரங்கள் இல்லை என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக முயற்சிக்கிறோம் என்று சொல்கிறார்கள். இது மிக வேடிக்கையான ஒரு கருத்து.

இந்த 13ஆம் திருத்தச் சட்டத்திலே எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. ஆகவே அரசியல் தலைமை என்பது அதிகாரம் இல்லை. அதிகாரம் இல்லை என்று மக்களிடையே சென்று சொல்வதற்காக மக்கள் எங்களைப் பிரதிநிதிகளாக தெரிவு செய்யவில்லை. இல்லாத அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆகக் குறைந்தது பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வுகளைச் செய்ய வேண்டும்.

அதற்கான ஆயத்தங்களையும், பலத்தினையும் ஒருங்கமைப்பதே ஒரு அரசியல் தலைமையின் கடமை. அதிலிருந்து தவறிக் கொண்டு அதை விமர்சிப்பதை அவர்கள் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் பொறுப்பான ஒரு விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்ட ஒரு  அமைப்பு என்ற வகையிலே, போராட்டத்தின் வலிசுமந்தவர்கள் என்ற வகையிலே இந்த விடயத்தைக் காத்திரமான முறையில் இந்த அரசியல் நகர்வை நாங்கள் வெற்றிகரமாக நகர்த்துவதன் மூலம் தான் மக்களுக்கான தீர்வை நோக்கிய ஒரு பயணத்தை நாங்கள் மேற்கொள்ள முடியும் என்ற வகையில் தான் நாங்கள் இந்திய அரசாங்கத்தினுடைய தலையீடு, அல்லது அவர்களின் உதவியின் மூலம் பொறுப்புடைய இந்த 13ஐ முற்று முழுதாக நடைமுறைப்படுத்த உதவுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு தான் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றோம்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது - குருசாமி சுரேந்திரன் - இறுதிப் பகுதி

2 COMMENTS

Leave a Reply