கொரோனா தோற்றத்தை அறிவதில் உலக சுகாதார அமைப்பு உறுதி

கோவிட்–19 வைரஸ் பரவல் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிக்காமல் விடப்போவதில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

அவ்விவகாரத்தைத் தாங்கள் கைவிட்டு விட்டதாகச் கூறப்படுவதை அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் மறுத்தார்.

வருங்காலத்தில் இத்தகைய நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க SARS CoV-2 வைரஸ் எங்கிருந்து, எப்படி வந்தது, மனிதர்கள் மத்தியில் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்றார் அவர். 2019ஆம் ஆண்டு இறுதியில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் ஆரம்பமானது.

எனினும் அது தொடர்பான ஆய்வுகளுக்குச் சீனாவிடமிருந்து சரிவர ஒத்துழைப்பு கிடைக்காததால் உலக சுகாதார அமைப்பு அதன் ஆய்வுகளைக் கைவிட்டுவிட்டதாக நேச்சர் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு விளக்கமளித்த டொக்டர் டெட்ரோஸ் சீன அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதற்கு முன் 2021 இல் சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றை உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு நேரடியாக அனுப்பியது. ஆயினும் அதில் பெறப்பட்ட தகவல்கள் வெளிப்படையாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.