ஜனாதிபதியை சந்தித்து பேசியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

165 Views

ஜனாதிபதியை சந்தித்து பேசியது

ஜனாதிபதியை சந்தித்து பேசியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, பாராமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தாத்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், த. கலையரசன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சந்திப்பின் போது நாங்கள் சில இணக்கப்பாடுகளிற்கு வந்துள்ளோம், முக்கியமான விடயம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பானது இது குறித்து வெளிவிவகார அமைச்சருடன் ஆராய்ந்தோம், அரசாங்கம் போரசிரியர் ரொமேஸ் டி சில்வாவின் அறிக்கைகளிற்காக காத்திருக்கின்றது அது வெளியாவதற்கு இன்னமும் இரண்டுமாதங்களாகும்.

இதேவேளை இக்காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களையும் அவருக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் விடுதலை செய்வது என இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவர்களின் விவகாரங்கள் குறித்து நானும் நீதியமைச்சரும் ஆராய்வோம்.   எங்கள் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்போம் அதன் பின்னர் இதனை எப்படி முன்னகர்த்துவது என ஆராயப்படும்.

வடக்கில் ஜனநாயகத்திற்கு எதிரான காணி விவகாரங்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

மாவட்டங்களை பிரதேசங்களை கடல் எல்லைகளை மாற்றுவது இடம்பெறாது, தொல்லியல் வனவிலங்குகள் காடுகள் தொடர்பான சிறப்புச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்படும்.

இந்த விசேட சட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் மீண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்.   நீண்டகாலமாக பயிர் செய்கையில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்தும் பயிர்செய்யலாம்,மீனவர்கள் தொடர்ந்தும் மீன்பிடியில் ஈடுபடலாம்,எங்கு வாழ்வாதாரம் இடம்பெறுகின்றதோ அது தொடரும்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஒரு இலட்சம் ரூபாயினை வழங்குவது என்ற தீர்மானம் குறித்து ஆராயப்பட்டது அது இழப்பீடு அல்ல தற்காலிக நிவாரணம்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரை பொறுத்தவரை – அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் வழங்குவது என்ற முடிவு இழப்பீடு இல்லை – மாறாக குடும்பத்தினருக்கு தற்காலிக நிவாரணம் என ஜனாதிபதிதெரிவித்தார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பமாகி பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடமாகாண மக்களின் அபிவிருத்திக்கான விசேட நிதியம் குறித்தும் ஆராயப்பட்டது, புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக அணைத்தையும் செய்ய தயார் என அரசாங்கம் தெரிவித்தது .

இதேவேளை இன்றைய சந்திப்பு வெற்றியா தோல்வியா  என வகைப்படுத்த விரும்பவில்லை,ஆனால் ஜனாதிபதியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது கரிசனைகளை ஆராயமுடிந்தது சிறந்த விடயம் என்றார்.

Tamil News

Leave a Reply