கூட்டமைப்பினை அம்பாறை மாவட்ட மக்கள் கைவிட்டாலும் கூட்டமைப்பு அவர்களை கைவிடவில்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்ட மக்கள் கைவிட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிடவில்லை,அம்பாறை மாவட்ட மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அபிவிருத்தியை கூறி மக்களிடம் வாக்குப்பெற்றவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கி அமைச்சுகளைப்பெற்று மக்களுக்கு சேவையாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எனக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அனைவருக்கும் பொதுவான பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவேன்.வருங்காலத்தில் தமிழ் தேசியத்தினை கட்டியெழுப்புவது எனது மிகவும் முக்கியமான கடமையாக இருக்கும்.

தமிழரசுக்கட்சியை மீள கட்டியெழுப்பி வெற்றியை நோக்கி கொண்டுசெல்வதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளேன்.கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்களை கட்டியெழுப்புவது எனது கடமையாக இருக்கும்.

கிழக்கினை மீட்கப்போகின்றோம் எனவும் பிரதேசவாதங்களையும் பேசி வாக்குகேட்டவர்கள் அனைவரும் அமைச்சு பதவிகளை இந்த அரசாங்கத்திடம் கோரவேண்டும்.அதன்மூலம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று அதனைவிட தமிழ் தேசியத்தினை புறக்கணித்து அபிவிருத்திக்காக வாக்களித்த மக்கள் அவர்களின் காரியாலயத்தினை முற்றுகையிட்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தங்களை வழங்கவேண்டும்.

எங்களிடமும் வாருங்கள் தமிழர்களுக்கு எங்காவது அநீதி நடந்தால்ääதமிழர்களின் நில அபகரிப்புääதமிழர்களுக்கு எதிராக ஏதாவது அநீதி நடைபெற்றால் அதற்கு எதிரான குரலை நாங்கள் வழங்குவோம்.எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை செய்வோம் என்ற அடிப்படையில் தமிழர்களின் உரிமையினை பாதுகாக்கும் வகையில் செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்திகளையும் செய்வோம்.அத்தோடு சர்வதேச சமூகத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.

அபிவிருத்தி செய்வோம் என்று கூறிவந்தவர்கள் செய்யமுடியாத சில வேலைத்திட்டங்களை நாங்கள் செய்வோம்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தாமை காரணமாகவே அங்குள்ள மக்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்கும் நிலைமை ஏற்பட்டது.அம்பாறை மாவட்டம் என்பது வடகிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதியாகும்.வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அங்கு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டதை நான் வரவேற்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்ட மக்கள் கைவிட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிடவில்லை.அம்பாறை மாவட்ட மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் உணர்ந்துகொள்வார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் வாக்கினை பிரித்து பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்தவருக்கு அவரை அங்கு இறக்கிய கட்சியினர் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினை வழங்கியிருக்கமுடியும்.எதிர்காலத்தில் கல்முனை பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பூரணமாக வழங்குதற்கு தேவையான அழுத்தங்களை அரசாங்கதிற்கு தொடர்ச்சியாக வழங்குவேன்.