பலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்

தமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்பது தமிழர்களின் இரத்தமும் சதையும் நிறைந்த போராட்டமாகும்.வெறும் அபிவிருத்திக்கும் அற்ப தேவைக்கும் ஏற்பட்ட போராட்டம் இல்லை.தமிழர்கள் காலம்காலமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதன் காரணமாக எழுந்த தீச்சுவாலை.

தமிழர்களின் அகிம்சை போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட ஆயுதவழிப்போராட்டமே தமிழர்களுக்கான இருப்பினையும் தேவையினையும் உரிமையினையும் இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் சொல்லியது.

இந்த ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தும்கோடிக்கனக்கான சொத்துகளை இழந்தும் தாங்கள் வாழ்ந்த தாயகத்தினை இழந்தும் தமக்கான சுயத்தினையும் தமது உரிமைக்கான போராட்டத்தினையும் இழக்கவில்லை.

இன்று பல்லாயிரக்கணக்கில் உயிர் பலி கொடுத்த வரலாற்றை மறக்கும் நிலை வடகிழக்கில் உருவாகிவரும் நிலையில் நாங்கள் இந்த போராட்டத்திற்காக எவற்றினையெல்லாம் இழந்தோம் என்பதை அந்ததந்த மாவட்ட மக்கள் மறந்துவரும் நிலையில் நாங்கள் எதற்காக போராடினோம் என்பதை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு இழப்புகள் எம்மை சூழ்ந்து நிற்கின்றன.

இன்று எங்களுக்கு உரிமை வேண்டாம்,எமக்கு அபிவிருத்தியும் அன்றாடம் சுகபோக வாழ்க்கை மட்டுமே போதும் என்று தமது உணர்வு அரசியலை முன்னெடுக்கும் இளந்தலைமுறையினர் கடந்த காலத்தில் இந்த நாட்டில் தமிழர்கள் சுதந்திரமாகவும் உரிமையுடனும் வாழ்வதற்கு எவ்வற்றினையெல்லாம் இழந்தார்கள் என்பதை உணர்வதும் தெரிந்துகொள்வதும் அவசியமாகும்.

வடகிழக்கு இணைந்த தாயகம்,வடகிழக்கு சுயாட்சி அலகு என்பன வெறும் சுகபோகத்திற்காக கோரப்பட்ட விடயம் அல்ல.கிழக்கு மாகாணத்தினை சிங்களம் கூறுபோட தொடங்கிய நாள் தொடக்கம் வடக்கினை சிங்கள தேசம் கூறுபோட தொடங்கிய நாள் தொடக்கம் குரல் எழுப்பப்பட்டுவருகின்ற பிரச்சினையாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தினை நசுக்குவதற்காக தமிழ் -முஸ்லிம்களிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்கள் மத்தியில் இருந்த கடும்போக்காளர்களைக்கொண்டு ஆயுதக்குழுக்களை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீது படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான படுகொலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.எண்ணிலடங்கா தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன் பல கிராமங்கள் அழிக்கப்பட்டு தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.துரத்தியடித்தும் செல்லாதவர்கள் மீது படுகொலைகள் நடாத்தப்பட்டன.

இவ்வாறான பல கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் வீரமுனைப்படுகொலை நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

30வருடங்களை கடந்துள்ள நிலையில் வீரமுனைப்படுகொலையினை மீட்டவேண்டிய அவசியம் இருக்கின்றது.இன்று அபிவிருத்திக்காக தமிழ் இளைஞர்களின் உணர்வுகள் திசை திருப்பப்படும் நிலையில் இவ்வாறான படுகொலைகளை எதிர்கொண்ட கிராமங்கள் தொடர்ச்சியாக தமிழ் தேசியத்திற்காக செய்த அர்ப்பணிப்புகளை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கின்றது.

1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர்.

வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் 69 தமிழர்கள் படுகொலை

05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை

10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .

16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 97 பேர் கொல்லப்பட்டனர்.

பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவுää வளத்தாப்பிட்டி கணபதிபுரம்ä,மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.

வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய படுகொலை என்பது இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990ஆண் ஆண்டு காலப்பகுதியில்வளத்தாப்பிட்டி,   மல்வத்தை,மல்லிகைத்தீவு,வீரச்சோலை உட்பட எட்டு கிராமங்களின் மக்கள் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராமகிருஸ்ண மிசன் ஆகிய பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்தனர்.அவர்கள் தொடர்ச்சியாக சுற்றிவளைக்கப்பட்டு ஆண்கள் கைதுசெய்யப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதுமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

இறுதியாக 12.08.1990 இராணுவத்தினர் பாதுகாப்புடன் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராமகிருஸ்ண மிசன் ஆகியவற்றுக்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிறுவர்கள்,பெண்கள்,முதியவர்கள் என 97பேரை படுகொலைசெய்தனர்.

இந்த படுகொலையின்போது வீரமுனையின் முதல் பெண் பட்டதாரியான பரமா ஆசிரியர் என்பவர் முஸ்லிம் ஆயுததாரிகளிடம் இருந்து மக்களை காப்பதற்காக போராடி இறுதியில் தனது உயிரையும் பறிகொடுத்தார்.இந்த கொலை வெறித்தாக்குதலின்போது பாடசாலையில் இருந்த சிறுவர்கள் சுவரில் தூக்கி, டிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர்.

இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர்.

இவ்வாறான பெரும் படுகொலையை எதிர்கொண்ட வீரமுனை படுகொலையின் 30வது ஆண்டு நிறைவு இன்றைய தினம் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்படுகின்றது.