கூட்டமைப்பின் தோல்விக்கு அதன் தலைமையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு ஏற்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் வருமாறு:
கேள்வி: இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: மக்கள் தமிழ்த் தேசியத்தின்பால் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். அதில் மாற்றமில்லை. பெரும்பான்மை கட்சியின் வேட்பாளர்கள் மக்களுக்கு சில சலுகைகளை வழங்கியதால் தேர்தல் கால இறுதி நேரத்தில் எங்களுக்கான ஆதரவு நிலையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தேசியத்தின்பால் அக்கறை இருக்கிறது. இருந்தாலும் தேசியம் மட்டும் தேவையில்லை என்ற நிலையிலும், இப்படியான சோரம் போகும் நிலையில் மக்கள் உள்ளனர். தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். இதனாலேயே எங்கள் வாக்குப் பலத்தில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது.
கேள்வி: உங்கள் தனிப்பட்ட வெற்றிக்கு அப்பால் உங்கள் கட்சியின் பின்னடைவு தொடர்பில் கூற முடியுமா?
பதில்: நான் வெற்றி பெற்றிருக்கிறேனே தவி, கூட்டமைப்பு படு தோல்வியை சந்தித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில்,நாங்கள் யாழ்ப்பாணத்தில் 2 ஆசனங்களை இழந்திருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தையே இழந்திருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக அரச சார்பானவர்கள் செயற்பட்டனர். இதனால் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை பிரித்து அளித்துள்ளனர். எனவே அங்கு எங்கள் பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்றோம்.
வாக்குகளை ஒருங்கே குவித்தால் தான் எங்கள் பிரதிநிதித்துவத்தை,காப்பாற்ற முடியும் என்று சிந்திக்க மக்கள் தவறி விட்டார்கள். இந்த
மக்கள் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு, ஓரணியின் கீழ் ஒன்று சேர்ந்திருந்தால்,அது எந்த அணியானாலும் சரி,அந்த ஆசனத்தை நாங்கள் பெற்றிருக்க முடியும். கூட்டமைப்பின் தேசியத்துடன் அவர்கள் பயணித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். அதில் அவர்கள் விழிப்படையத் தவறி விட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் எப்படியிருந்தாலும் அது தமிழர் பிரதேசம். அது வேறு விடயம். ஏனைய இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எங்கள் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்திருக்கின்றார்கள் என்றால், எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே இதற்கு பொறுப்புக் கூறவேண்டியிருக்கிறார்கள். தனிப்பட்ட வேட்பாளர்களைக் கூற முடியாது. தவறுகள் முழுக்க கூட்டமைப்பின் தலைமையிலேயே இருக்கின்றது. இதை நான் பகிரங்கமாக கூறுவேன்.
கேள்வி: மக்கள் ஆணையால் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தினால் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் வெற்றியை தமிழ்த் தேசிய மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?
பதில்: தமிழ்த் தேசியத்தின்பால் சரியான பாதையிலேயே கடந்த காலங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். அத்துடன் மக்களின் மேம்பாட்டிற்கான சமாந்தரமான அபிவிருத்திக்கான அடையாளங்களை முன்னெடுப்போம்.
மக்களுக்கு தீர்க்கப்படாத நிறைய பிரச்சினைகள் காலம் காலமாக இருக்கின்றது. பல கட்சிகள் இருந்தும்,ஆளும் கட்சிகள்,எதிர்க் கட்சிகள் மற்றும் கட்சிகளால் தீர்க்கப்பட முடியாத தீர்க்கப்பட வேண்டிய, தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல உள்ளன. மக்களின் வாழ்வாதாரங்களை அதிகரிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தாமல் நாம் அவர்களை ஏமாற்ற முடியாது. அவர்களின் குடும்பத்தின்,ஒரு கிராமத்தின் வாழ்வாதாரங்களை நாம் மேம்படுத்தாமல் இருக்க முடியாது.
பொதுஜன பெரமுன அரசாங்கமே ஆட்சிக்கு வந்திருக்கின்றது. அந்த அரசாங்கத்துடன் ஆகக் கூடியளவு எங்கள் மக்களின் அபிவிருத்தித் திட்டங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவோம். உரிமை சார்ந்த பிரச்சினையிலும், இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளிலும் எப்படியான நிலைப்பாட்டை எடுப்பது என்பது ஒரு புறம் இருக்க, கூடுதலான தமிழ் மக்களால் ஏற்றுக் கொண்ட கட்சி என்பதால் எங்களுடன் சேர்ந்து அபிவிருத்தி விடயங்களில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு கடமைப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
நாங்கள் அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசாங்கத்திடம் இருந்து நிதி வளங்களைப் பெற்று அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய ஒரு பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.
இந்த தேர்தல் மூலம் நாங்கள் உணர்ந்த விடயம் அது தான். ஒவ்வொரு கிராமங்களிலுள்ள தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு மக்கள் எங்களிடம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அவற்றை நாங்கள் செய்து கொடுக்க வேண்டிய கடமை இருக்கின்றது. அது தான் நாங்கள் மக்களிடமிருந்து அந்நியப்படாமல் இருக்க செய்யவேண்டியது.