தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு – துரைசாமி நடராஜா

தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு

தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு

துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறை தற்போது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்துறை எதிர்கொள்ளும் நெருக்கீடுகள் தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலைமையானது, தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதோடு தொழிற்றுறை மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இவற்றினிடையே தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருடனான தொழிலாளர்களின் முரண்பாடுகள் ஒரு பதட்ட நிலைமைக்கு வித்திட்டுள்ளதோடு, வெளியாரின் உள்நுழைவுக்கும் அது உந்துசக்தியாகி விடுமோ என்றும் அஞ்சப்படுகின்றது.  இதனிடையே இனவாத சூழலில் இப்போது நாம் வசித்து வருகின்ற நிலையில், தொழிலாளர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய ஒரு தேவைப்பாடு மேலெழுந்துள்ளது. இதேவேளை  தொழிலாளர்களை பகடைக்காய்களாக வைத்து,  தோட்டங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தி குளிர்காய முனையும் விஷமிகள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெருந்தோட்டங்கள் நிறுவனங்களுக்கு கை மாறியதைத் தொடர்ந்து தோட்டங்களின் நிலைமைகள் திருப்தி தருவனவாக இல்லை. நிறுவனத்தினரின் எதேச்சதிகாரப் போக்குகள் தொழிலாளர்களை விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது. தோட்டத் தொழிற்றுறையின் பல்வகைசார் நெருக்கீடுகளையும் கருத்தில் கொண்டு, தொழிலாளர்கள்  மெதுமெதுவாக ஏனைய தொழிற்றுறைகளை நாடிச் செல்லும் ஒரு போக்கு காணப்படுகின்றது. தோட்டங்களில் பதிவு செய்து கொண்டு தொழில் புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை இதனை நன்கு புலப்படுத்துகின்றது. 1995 இல் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் 280,572 தொழிலாளர்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர். 2015 ஆம் ஆண்டில் இது 149,917ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை உற்பத்தியை பொறுத்தவரையில், 1995 இல் பெருந்தோட்டத் தேயிலை உற்பத்தி 168.8 மில்லியன் கிலோகிராமாக இருந்தது. இந்த உற்பத்தியும் வீழ்ச்சிப் போக்கினையே வெளிப்படுத்தியது. இதனடிப்படையில் 2017 இல் பெருந்தோட்டத் தேயிலை உற்பத்தி 104 மில்லியன் கிலோகிராமாக இருந்தது. இந்நிலைமைகள் நிறுவனத்தினரின் ஆதிக்கத்தில் தோட்டங்களின் பின்தங்கிய வெளிப்பாடுகளையே புலப்படுத்துவதாக உள்ளன.

முறுகல் நிலை

கூட்டு ஒப்பந்த சரத்துக்களை மீறிய செயற்பாடுகள், தொழிலாளர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் புறந்தள்ளப்பட்டமை, சம்பள நெருக்கீடுகள், பல விடயங்களில் நிறுவனத்தினரின் உடும்புப்பிடி போன்ற பலவும் நிறுவனங்களிடமிருந்து தொழிலாளர்களை அந்நியப்படுத்தி இருந்ததோடு, விரிசல் நிலை மேம்படவும் வலுசேர்த்திருந்தது. இதேவேளை தோட்ட உத்தியோகத்தர்களின் கொச்சையான வார்த்தைப் பிரயோகங்கள், தொழிலாளர்களை அடிமை நிலையில் வைத்திருக்கும் மனோபாவம், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமை எனப் பலவும் தொழிலாளர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட ஏதுவாகியிருந்தது.

ஆயிரம் ரூபா சம்பள விடயம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் சாத்தியமான நிலையில், தொழிலாளர்களின் வேலைப்பளு அதிகரித்திருப்பதாகவும், வேலை நாட்கள் குறைவாக வழங்கப்படுவதாகவும் பல இடங்களில் இருந்தும் முறைப்பாடுகள் தொழிற்சங்கக் காரியாலயங்களுக்குக் கிடைத்து வருகின்றன. நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவு 15 கிலோவில் இருந்து 22 கிலோவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தார். தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்குநிறுவனத்தினரால் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் நிலைமை குறித்தும் அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளம் தமக்கு சரிவர வழங்கப்படாத நிலையில், அது  குறித்து கேள்வி எழுப்பியபோது  தலவாக்கலை, கட்டுக்கலை தோட்டத்தில் அண்மையில் முரண்பாடுகள் மேலெழுந்துள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்கள் பல அசௌகரியங்களையும். சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் குறித்த நெருக்கடிகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களை தம்மால் ஏற்பதற்கில்லையென்றும், அப்படியொரு நெருக்கடி நிலைமை இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றும் பெருந்தோட்டப் பிராந்தியக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந் நிறுவனங்களின் கருத்து எந்தளவுக்கு நம்பகத்தன்மை மிக்கது என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகளையும் மையப்படுத்தி தோட்டங்களில் உத்தியோகத்தர் களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல்நிலை மேலெழுந்து வருகின்ற நிலையில், இது தொழிற்றுறையையும், தோட்டங்களையும், தொழிலாளர்களையும் சிக்கலான நிலைமைக்குள் தள்ளியுள்ளது. நிறுவனங்களும், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் தொழிலாளர்மீது ஒரு வக்கிரப் பார்வையை செலுத்தி வருவதனை கடந்த கால சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன. தோட்ட நிர்வாகம் தம்மீது வீண்பழி சுமத்தி நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்க முற்படுவதாக தொழிலாளர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் ஒரு சில நிர்வாகங்களின் பழிவாங்கும் படலம் இவ்வாறாக விரிந்து செல்கின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை. மறுபுறத்தில் தோட்டப் புறங்களின் அமைதியைச் சீர்குலைத்து வெளியாரின் பிரசன்னத்தைத் தோட்டத்தில் உள்நுழைக்க  முயலும் சில சக்திகள் தொழிலாளர்களை உசுப்பேத்தி பிழையான செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்வதாகவும் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கட்டுக்கலை  தோட்டச் சம்பவத்தைத் தொடர்ந்து தோட்டப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவ பிரசன்னத்தை இலங்கை தோட்டத் துரைமார் சங்கம் கோரியுள்ளமை இதன் ஒரு வடிவமே என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்குதோட்டப்புறங்களில் இராணுவப் பிரசன்னம் என்பது துரைமார்களுக்கு வேண்டுமென்றால் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் இதனால் மேலெழும்பும்  சமூக ரீதியான பிரச்சினைகள் பலவற்றுக்கும் தொழிலாளர் சமூகம் எந்தளவு முகம் கொடுக்கப் போகின்றது? என்பது கேள்விக்குறியான விடயமேயாகும். எனவே துரைமார் சங்கம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரீதியில் கருத்துத் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்ட பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிற்றுறை என்பது புரிந்துணர்வுடன் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒரு துறையாகும். இதில் நிறுவனங்கள், உத்தியோகத்தர்கள், நிர்வாகம், தொழிலாளர்கள் என்ற தரப்புகள் விட்டுக் கொடுப்பு டன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தரப்பினரும் விட்டுக் கொடுப்பின்றி ஒவ்வொரு பக்கத்திற்கும் இழுப்பார்களானால் இதனால் பிரச்சினைகள் பலவும் மேலெழும்புமே தவிர, தீர்வோ அல்லது அமைதியோ ஏற்படமாட்டாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலாபத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து, அவர்களைப் புறந்தள்ளாமல், அவர்களின்  பல்துறை சார்ந்த நலன்கள் குறித்தும் நிறுவனத்தினர் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தேயிலைத் தொழிற்றுறையில் இருந்து பெருந்தோட்ட நிறுவனங்கள் விலகிக் கொண்டால் தேயிலைத் தொழிற்றுறை வீழ்ச்சியடைந்து விடும் என்ற அச்சுறுத்தல்களுக்கும் அப்பால், மனிதநேயத்துடன் தொழிலாளர்களை அணுகவும் நிறுவனம் மற்றும் உத்தியோகத்தர் தரப்பினர் முனைதல் வேண்டும். இது சாதக விளைவுகள் பலவற்றுக்கும் இட்டுச் செல்வதாக அமையும்.

இதேவேளை இப்போது நாட்டில் இனவாதச் சூழல் நிலவுகின்றது. தோட்டத்  தொழிலாளர்களின் உரிமைகளை எவ்வாறு மழுங்கடித்து, அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தலாம் என்று இனவாதிகள் வழிதேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு தொழிலாளர்கள் பலிக்கடாவாகிவிடக் கூடாது. விளக்கை பழம் என்று நம்பி ஏமாறும் லிட்டில் பூச்சியமாக தொழிலாளர்கள் இருந்து விடக்கூடாது. உசுப்பேத்தல்களுக்கும், வீணான படாடோபங்களுக்கும் அடிபணியாது ஆழமாகச் சிந்தித்து தொழிலாளர்கள் செயலாற்ற வேண்டும். யாரும் எவர் மீதும் தாக்குதல் நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது. இது பிரச்சினைகளின்  அதிகரிப்பிற்கே உந்துசக்தியாகும் என்பதனை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். வன்முறைகளால் அதிக இழப்புக்களைச் சந்தித்த அனுபவம்  எமது நாட்டிற்குப் புதியதல்ல என்பதனை ஒரு போதும் மறந்துவிடலாகாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் பிரச்சினைகள் மேலெழும்புவது தவிர்க்க முடியாததாகும். இந்நிலையில்  பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முற்படுதல் வேண்டும். எவரையும் தாக்குகின்ற கலாசாரத்தை தொழிலாளர்கள் கைவிட வேண்டும்.

தொழிற்சங்கங்கள்

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் காவலர்கள் என்பார்கள். திசையறியாது நின்ற மலையக சமூகத்திற்கு கலங்கரை விளக்கமாக தொழிற்சங்கங்கள் பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளன. என்பதனை மறுப்பதற்கில்லை. தொழிலாளர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் தொழிற்சங்கங்கள் நெருக்கமான வகிபாகத்தினைக் கொண்டிருந்தன. அத்தகைய பேறு பெற்ற தொழிற்சங்கங்கள் சமகாலத்தில் தொழிலாளர்களின் அபிவிருத்தியில் ஆக்கப்பூர்வமான பங்காற்றுகின்றதா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தொழிலாளர்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றபோது பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க தொழிற்சங்கங்கள்  குரல் கொடுப்பது ஒரு புறமிருக்க, பிரச்சினைகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொள்ளாத வகையில் மூளைச் சலவை செய்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும் தொழிற்சங்கங்களுக்கு இருக்கின்றது. இதிலிருந்து எந்தத் தொழிற்சங்கமும் விலகிச் செல்ல முடியாது. ஒழுக்கக்கல்வியை தமது அங்கத்தவர்களுக்கு ஒவ்வொரு தொழிற்சங்கமும் விரிவுபடுத்துகையில் பிழையான வழிமுறைகளுக்கு தொழிலாளர்கள் செல்ல மாட்டார்கள்.

எனினும் தொழிற்சங்கங்கள் தற்போது இலக்குமாறி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நம்பகத் தன்மையற்ற ஒரு போக்கினையே காணமுடிகின்றது. இது மோசமான பின்விளைவுகளுக்கு அடித்தளமாக அமைந்து விடக்கூடும். நிறுவனத்தினர் வெளியார் உற்பத்தி முறையை முன்னிறுத்தி பேசி வருகின்ற நிலையில், தொழிலாளர் தொழிற்சங்க உறவு மேலும் பலவீனமடையும் என்று நம்பப்படுகின்றது. மலையக மக்களின் பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அறிக்கைகளில் மட்டுமே திருப்திப்படுத்தாத, செயற்றிறன் மிக்க, நிதானப் போக்குடைய தலைமைத்துவம் அவசியமாகின்றது. பொது அமைப்பை உருவாக்கி, தலைமைத்துவப் போட்டிகளை புறந்தள்ளி, சமூக எழுச்சியை மையப்படுத்தி, குரல் கொடுக்க வேண்டிய தேவை இப்போது மேலெழுந்துள்ளது. வீடுபற்றி எரிகையில் பீடி பற்றவைக்க முற்படும் சுயநலவாத அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் மலையக சமூகம் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்து விட்டது. இதன் எச்சங்கள் இன்னும் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில்  இனியும் இதனைத் தொடர விடுவதா? இல்லையா? என்பதனை மக்கள் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு - துரைசாமி நடராஜா