வெந்து தணியாது காடு

இலக்கு மின்னிதழ் 142 இற்கான ஆசிரியர் தலையங்கம்

இவ்வாரத்தில் உலகில் காடுகள் தீப்பிடித்து எரிகின்ற பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கிரீஸில் தலைநகரை காட்டுத்தீ நெருங்குகிறது என்ற அச்சத்துடன் மக்கள் நீர்கொண்டு நெருப்பணைக்கக் கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளின் தீயணைப்புப் படையினரும், அறிவியலின் உயர் தொழில் நுட்பங்களும் இணைந்து, காட்டுத் தீயினை நாட்டுத் தீயாக மாறாது, தடுக்க மிகப் பெரிய மனித உழைப்பை உலக நிதி வளங்களின் துணையுடன் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன.

இயற்கைப் பேரழிவு தரும் இந்தக் காட்சியானது தமிழீழத் தாயகத்தை சிறீலங்கா அரசு எறிகணை வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களாலும் எரித்தழித்த காட்சிகளை மனக்கண் முன் நிறுத்துகிறது. காட்டை மட்டும் அல்ல, வீட்டையும் எரித்தார்கள். வீட்டை மட்டுமல்ல, நாட்டையே எரித்தார்கள். ஆனால் இன்று எரித்தவர்கள் “விழ விழ எழுவோம்” என்னும் புதுவையின் கவிமொழி தமிழீழத்தின் எருவையும் பசுமை கொள்ள வைக்கும் என்ற உண்மையைக் கண்டு கொண்டனர். இன்று முள்ளி வாய்க்கால் ஈழத் தமிழன அழிப்பின் 12 ஆண்டுகளின் பின்னரும் வெந்து தணிந்தது காடு என்ற பாரதியின் சுதந்திர வெம்மையையே,  அவன் காலமாகிய நூற்றாண்டு ஆண்டாகிய இவ்வாண்டில் ஈழத்தமிழ் மக்கள் வென்று, வெந்து தணியாது காடு என்னும் புதிய தத்துவத்தை உருவாக்கி நிற்கின்றனர்.  தம் நாடு மீண்டும் பசுமையுடன் எழும் என்னும் உறுதியின் உறைவிடங்களாக உலகெங்கும் ஈழமக்கள் உலாவிக் கொண்டிருக்கின்றனர். ஈழத் தமிழரின் இந்த உலகளாவிய தாயக விடுதலையை நெஞ்சினில் ஏந்தி வாழும் வாழ்க்கை, ஈழத்தில் தமிழர்களின் இருப்பை ‘ஒருநாடு ஒரு சட்டம்’ என்ற சர்வாதிகாரச் சிங்கள பௌத்த பேரினவாத அரச கொள்கையால் இன்று அழிக்க முற்படுவதை, ஒரு பொழுதும் வெற்றி பெற அனுமதியாது என்பது உறுதியிலும் உறுதி.

அதுமட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்புத் திறனைச் சிங்கள அரசாங்கங்கள் உலக அரசாங்கங்களுடன் சேர்ந்து படைபலம் கொண்டு, பின்னடைய வைத்ததின் விளைவாக இன்று ஒவ்வொரு சாதாரணச் சிங்களக் குடியும் தனது பாதுகாப்பை இழந்து, ஒரு குடும்ப மாட்சிக்கான ஆட்சியின் விரிவாக்கத்துள் தங்கள் இறைமையையே பிறநாடுகளிடம் இழந்து கொண்டிருக்கிற பேரபாயத்துள் சிக்குண்டு திணறுகின்றனர்.

இந்திய பிராந்திய வல்லாண்மை கூட ஈழத் தமிழர்களின் அரசியல் எதார்த்தத்தை ஏற்று, வளர்க்காது விட்டதன் விளைவு 2009ஆம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்புடன் ஈழத் தமிழர்களின் துப்பாக்கிகள் மௌனித்ததின் பின்னர் தென்னிந்திய இந்துமா கடலில் தனது துப்பாக்கிகளை மௌனிக்க வைக்கும் அளவுக்குச் சீன வல்லாண்மையின் வளர்ச்சிக்குச் சிறீலங்காவின் சிங்கள பௌத்த மேலாண்மை துணை போயிருப்பதைக் காண்கின்றது.

சோழரின் புலிக்கொடி ஈழமக்களின் தாயகக் கொடியாக மீண்டும் ஆழக்கடல் மீது அசைந்து கொண்டிருந்த காலத்தில் காணாத கோலங்களை எல்லாம் இன்று இந்தியா தென்னிந்தியக் கடலில் காண்கின்றது. தமிழிலே உள்ள  ‘சிறுதுரும்பும் பல்குத்த உதவும்’  என்ற ஆழமான வழக்கு மொழி மக்கள் தொகையில் பெரும்பான்மை யினர்க்கும், மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் தேவையின் முக்கியத்து வத்தை நெஞ்சிருத்தும் பழமொழி.

இன்றைய வரலாற்று மாற்றங்கள் உலகுக்கும் சிங்களவர் களுக்கும் ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்கிறது. ஈழத் தமிழர்களின் இறைமையையும் தன்னாதிக்கத்தையும் பாதிப்படையச் செய்யும் ஒவ்வொரு செயற்பாடும் உங்களின் பாதுகாப்பான அமைதியையும் சீர்குலைக்கும் என்பதே அச்செய்தி.

ஏனெனில் ஈழமக்களின் மண்; தமிழீழத் தாயகம். அந்த தமிழீழத் தாயகத்தின் கடல் இந்துமா கடல். ஈழமக்களுடனான தமிழக மக்களுடனான, தென்னிந்திய மக்களுடனான வர்த்தகத் தொடர்புகள்தான், இந்துமா கடல் வழியாக ஐரோப்பிய உலக மயமாக்கலுக்கும், அனைத்துலக வர்த்தக எழுச்சிக்கும் மட்டுமல்ல, பிரித்தானியப் பேரரசின் உலகப் பேரரசுத் தன்மைக்கும் உதவின என்பது உலக வரலாறு.

எனவே இலங்கைத் தீவினைத் தாயகமாகக் கொண்ட ஈழத் தமிழர்களும், தாங்கள் உலகுக்கும் இலங்கைத் தீவுக்கும் பங்களிப்புகள் செய்த உரிமையுள்ள உலக இனத்தவர் நாட்டினத்தவர் என்ற உரிமையுடன் தங்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை தங்கள் வெளியக தன்னாட்சியின் அடிப்படையில் மீள நிறுவுவதற்கு இந்தியா, பிரித்தானியா உட்பட்ட உலக நாடுகள் அனைத்தையும் அணுகி, கெஞ்சாது சமத்துவமாகக் கொஞ்சிடும் உறவை வளர்த்து, தங்களது தமிழீழ மண்ணையும், மக்களையும் காத்திடுமாறு உரையாடல்களை நிகழ்த்துவது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021