கிழக்கு நோக்கி பேரணியை நடத்தியதற்கான காரணம்?-மாணவா் அமைப்பின் தலைவா் செவ்வி

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பேரணி ஆரம்பம்! – Vanakkam London

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது என்ற கோஷத்துடன் வடக்கிலிருந்து கிழக்கிற்கு நடத்தப்பட்ட நான்கு நாள் பேரணி மட்டக்கப்பை சென்றடைந்து வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றது. இந்தப் பேரணியை ஏற்பாடு செய்து தலைமைதாங்கியவா்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவா் ஒன்றியத்தின் தலைவா் சில்வெஸ்ட்டா் ஜெல்சின் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இலக்கு வாசகா்களுக்குத் தருகின்றோம்.

 கேள்வி – வடக்கிலிருந்து கிழக்கிற்கு நடத்தப்பட்ட இந்த பேரணியில் முன்னின்று நடத்தியவா்களில் நீங்களும் ஒருவா் என்ற முறையில் நீங்கள் எதிா்பாா்த்தளவுக்கு இந்தப் பேரணிக்கான ஆதரவு கிடைத்ததா?

பதில் –  நிச்சயமாக கிடைத்திருந்தது. பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் என்ற முறையில் இந்தப் பேரணியை நாம் முன்னெடுத்திருந்தோம். கடந்த வருடம் நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் போல இது வடக்கிலிருந்து கிழக்குக்கு நடத்தப்பட்டது.

வழமையாக போராட்டங்களை நாங்கள் வடக்கில்தான் நடத்துகின்றோம்.  அரசாங்கத்திடம் பொதுவான ஒரு கருத்து இருக்கின்றது – அதாவது வடக்கில் மட்டும்தான் பிரச்சினை உள்ளது, கிழக்கில் பிரச்சினைகள் இல்லை என்ற கருத்தை அரசாங்கம் முன்வைத்து வருகின்றது.

அரசாங்கத்தின் இந்தப்பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கியதாக எமது பேரணியை நடத்துவதற்கு நாங்கள் முடிவெடுத்தோம்.

இவ்வாறான பேரணி ஒன்றை நடத்தப்போகின்றோம் என்று ஆரம்பத்திலேயே நாங்கள் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தோம். வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினருடனும் இது தொடா்பாக நாம் பேசியிருந்தோம். இதற்கான அவா்களுடைய பதில்களும் சாதகமாகத்தான் அமைந்தது. எங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக அவா்கள் கூறினாா்கள். அது போலவே எமக்கான ஆதரவை அவா்கள் வழங்கியிருந்தாா்கள்.

இந்த வகையில் வடக்கிலிருந்து கிழக்குக்கான இந்தப் பேரணி சிறப்பாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது.

கேள்வி – அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் ஆதரவு உங்களுக்கு எந்தளவுக்கு கிடைத்தது? அவா்கள் எவ்வாறான உதவிகளைச் செய்தாா்கள்?

பதில் –  உண்மையில் இந்தப் பேரணியைப் பொறுத்தவரையில் அரசியல் கட்சிகளைத்தாண்டி பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இந்தப் பேரணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினாா்கள். அந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் எம்முடன் இணைந்து பணியாற்றினாா்கள். அதனைவிட அரசியல் கட்சிகள் இதில் பங்குகொண்டன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா்கள் சிலா் ஆரம்பத்திலிருந்தே இதில் பங்குகொண்டிருந்தாா்கள்.

இறுதிநாளில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவா்கள், இந்தப் பேரணியில் கலந்துகொண்டு அதற்கு வலுச்சோ்த்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

கேள்வி – பல சந்தா்ப்பங்களில் காவல்துறையினா் இந்தப் பேரணியைத் தடுப்பதற்கு முயன்றதாக செய்திகள் வெளிவந்தன. அவற்றை எவ்வாறு சமாளித்து முன்னேறினீா்கள்?

பதில் – இந்தப்பேரணியை ஆரம்பிப்பதற்கு முன்னரே எனது வீட்டுக்கு  புலனாய்வுத் துறையினா், காவல்துறையினா் வந்தாா்கள். வீட்டில் இருந்தவா்களிடம் என்னைப்பற்றி அவா்கள் விசாரணைகளை நடத்தினாா்கள். ஆனால், அது தொடா்பாக நாம் வெளிப்படுத்தவில்லை. அதேவேளையில், இவ்வாறு செய்ய வேண்டாம். செய்தால் ஆபத்து என்ற வகையில் அச்சுறுத்தல்கள் இருந்தன.

குறிப்பாகச் சொல்லப்போனால் அம்பாறையிலிருந்து ஒரு குழுவை நாங்கள் மட்டக்களப்புக்கு கொண்டுவந்தநாங்கள். அம்பாறையிலிருந்து மக்களை ஏற்றுவதற்காக பஸ் ஒன்று புறப்பட்டது. திட்டமிட்ட முறையில் அந்த பஸ் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் குறிப்பிட்ட பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்தன. மக்கள் வருவதைத் தடுப்பதற்கு இவ்வாறான வழிமுறைகளும் கையாளப்பட்டன.

இதனைவிட புலனாய்வுத்துறையினா் ஒழித்திருந்தும், நேரடியாகவும் புகைப்படங்களை எடுத்தாா்கள்.

இவற்றின் மூலமாக பெரும் அச்சுறுத்தல் ஒன்று இருந்தது. ஆனால், இந்த அச்சுறுத்தலையும் மீறி இந்தப் பேரணியை நாங்கள் நடத்தினோம்.

கேள்வி – கிழக்கு மாகாணத்தில் இதற்கான ஆதரவு எவ்வாறிருந்தது?

பதில் –  கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களால் தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவருகின்றது. இதனால், இந்தப் பேரணிக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற கேள்வியுடன்தான் நாம் அங்கு சென்றிருந்தோம். ஆனால், திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு வரை நல்லதொரு ஆதரவை அந்தப் பகுதி மக்கள் வழங்கியிருந்தாா்கள்.  கிழக்கு மாகாண இளைஞா்கள் உணா்வெழுச்சியுடன் அந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்தாா்கள். எம்மை சிறப்பான முறையில் வரவேற்று  – அந்தப் பேரணிக்கு வலுச்சோ்த்தாா்கள்.

கேள்வி – இந்தப் பேரணியில் இந்தளவு மக்கள் ஒரு உணா்வெழுச்சியுடன் கலந்துகொண்டிருப்பதன் மூலமாக எவ்வாறான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது?

பதில் –  போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்டத்தின் நோக்கங்கள் மாற்றமடையாது என்ற தகவலைத்தான் இது வெளிப்படுத்தியிருக்கின்றது.  நாங்கள் ஆயுத வழியில் போராடியிருந்தோம். அஹிம்மை வழியில் போராடினோம்.  ஆனால், எமது பிரச்சினைகளுக்கான தீா்வை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எமக்கான தீா்வை சா்வதேச சமூகம்தான் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இப்போது மக்கள் வந்துவிட்டாா்கள். இந்த அரசின் மீது இனிமேலும் நம்பிக்கை வைக்கும் நிலையில் மக்கள் இல்லை.

கேள்வி – பேரணியின் இறுதியில் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் முக்கியமாக எதனைக் குறிப்பிட்டுள்ளீா்கள் என்பதை சுருக்கமாக சொல்ல முடியுமா?

பதில் –  சுயநிா்ணய உரிமை, தேசியம் என மூன்று கோரிக்கைகள் இதில் இருக்கின்றது. வடக்கு கிழக்கு சாா்ந்த பிரச்சினைகளை இதில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாங்கள் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

இதனைவிட, பொதுவாக்கெடுப்பு என்ற விடயத்தையும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். வடக்கு, கிழக்கு மக்களை உள்ளடக்கியதாக ஒரு வாக்கெடுப்பை நடத்தி அதில் வரக்கூடிய முடிவை ஏற்றுக்கொள்வதாக நாம் தெரிவித்திருந்தோம்.