தம்மால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்கார்கள் தீர்மானம்

இலங்கையில் தம்மால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள அரசாங்கத்திடம் கையளிக்க  போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்றிரவு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், பாதுகாப்பு பிரிவினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் பலர் காயமடைந்தனர். மேலும் இந்த போராட்டங்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் 80க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பின்னணியிலேயே போராட்டக்காரர்கள், இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். எனினும், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தம்மால் கைப்பற்றப்பட்ட இடங்களிலிருந்து அமைதியான முறையில் வெளியேற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் கடந்த 9ம் திகதி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.