வடக்கு கிழக்கு இன்னமும் யுத்த சூழல் போன்றே உள்ளன- செ.கஜேந்திரன்

299 Views

போர்முடிந்து 12 வருடங்கள் கடந்த போதும், இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடக்கு கிழக்கு காணப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள  தீர்த்தக்கரை என்னும் பகுதியை  ஆக்கிரமித்த இராணுவம்,  அப்பகுதியில் தமக்கான முகாம் ஒன்றினை  அமைத்திருந்தனர்.

இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து  12 வருடங்களாகியும்   இன்னமும் அந்த இடத்திலேயே இருக்கின்றது. அந்த முகாம் அமைந்திருக்கின்ற பகுதியால் தினமும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடல்தொழிலுக்கு சென்று வருகிறார்கள்.

அத்தோடு வல்லிபுரத்து ஆழ்வார் கோயிலுக்கும் பல நூற்றுக் கணக்கானவர்கள் சென்று வருவது வழமை. அதனை விட சிறப்பு திருவிழா நாட்களிலே பல்லாயிரக் கணக்கானவர்கள்  அப் பகுதியால் சென்று வருவதுண்டு.

இந்நிலையில், இந்த முகாம் பொது மக்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.   குறிப்பாக பெண்களுக்கு இது பாதுகாப்பானதாக இல்லை.

இந்நிலையில், தற்போது  குறித்த காணியை முழுமையாக படையினர் தமக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில்  கடந்த 16 ஆம் திகதி   போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தோம்.  மேலும்  சிறீலங்கா படைகள் தமிழர்களுடைய வாழ்விடங்களிலே  இருப்பதனை மக்கள் விரும்பவில்லை.

போர் முடிந்து 12 வருடங்களாகியும் இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடக்கு கிழக்கு காணப்படுகின்றது. இலங்கையிலே இருக்கிற 20  படைப்பிரிவுகளில்  16    படைப் பிரிவுகள்  வடக்கு கிழக்கிலே நிலை கொண்டிருக்கின்றன.

அதிலும் வடமாகாணத்தில் 13  படைப் பிரிவுகள்   நிலை கொண்டிருக்கின்றன.  தொடர்ந்தும் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் தான், படை தரப்பில் இருந்தும் அரசாங்க தரப்பில் இருந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் இவற்றை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த படைகள் இந்த மண்ணில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு”  என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply