சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு – துரைசாமி நடராஜா

374 Views

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு:  புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் முயற்சிகள் கடந்த கால அரசாங்கங்களினால் தோல்வியடைந்த நிலையில், பொதுஜன முன்னணி அரசாங்கம் இப்போது இதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கான வரைபு  விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து  புதிய அரசியலமைப்பின் உள்ளீடு தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள் புதிய அரசியலமைப்பை மலையக மக்களின் நலன்கருதி சாதகமாக்கிக் கொள்ள முற்படுதல் வேண்டும். இதேவேளை ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மக்கள் கருத்தறியும் குழுவின் முன்னிலையில் சிவில் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் முன்வைத்த கருத்துக்களையும், அரசியல்வாதிகள் சீர்தூக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

அரசியலமைப்புக் குறித்து பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஓர் அரசின் அதிகாரப் பங்கீட்டையும் அதனது தொழிற்பாட்டினையும் நிர்ணயிக்கக் கூடிய கொள்கைகளை உள்ளடக்கிய அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்கிறார் அறிஞர் டைசி. ஒரு அரசாங்கத்தின் அமைப்பு அதாவது அதன் துறைகளின் அமைப்பு, அத்துறைகளுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரம் அவற்றின் அதிகார எல்லை, அதனை செயற்படுத்த வேண்டிய முறை, மக்களின் உரிமைகள், கடமைகள் என்பவற்றை உள்ளடக்கியதே அரசியலமைப்பு என்கிறார் பிரைஸ் பிரபு. இதேவேளை என்றி மெயின், கில் கிறைஸ்ட்  ஆகியோரின் கருத்துக்களும்   இதில் முக்கியமானவையாகும்.

இந்த வகையில் ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்ற முக்கிய ஆவணமாக அந்நாட்டின் அரசியலமைப்பு விளங்குகின்றது. அரசியலமைப்பின் தொய்வுகள் நாட்டின் அபிவிருத்தியையும், ஐக்கியத்தையும் ஆட்டம் காணச் செய்துவிடும் என்பதே உண்மையாகும். இந்த வகையில் இலங்கையின் சமகால மற்றும் கடந்தகால அரசியலமைப்புகள் தொடர்பில் விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன. இந்த விமர்சனங்களின் எதிரொலியானது புதிய அரசியலமைப்பின் தேவைக்கு உந்துசக்தியாகியுள்ளது. புதிய அரசியலமை ப்பினை முன்வைக்கும் முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதும் அது சாத்தியமாகாத நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிக்கமைய இப்போது இந்நடவடிக்கையினை ஆரம்பித்திருக்கின்றது.

முன்வைப்புக்கள்

புதிய அரசியலமைப்பின் ஊடாக சாதக விளைவுகளைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு சமூகத்தினரும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். சமூகத்தின் மேலெழும்பு கைக்கு அரசியலமைப்பின் மூலமான சாதக உறுதிப்படுத்தல்கள் மிகவும் அவசியமானவை என்பது இவர்களின் கருத்தாகும். இதில் நியாயத்தன்மையும் உள்ளது. இந்நிலையில் மலையக அரசியல்வாதிகளும், இம்மக்களின் நலன் விரும்பிகளும்  ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்பை இம்மக்களுக்குச் சாதகமாக்கிக் கொடுக்க முற்பட வேண்டும். ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பினை முன்வைக்கும் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. புதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழு ஏற்படுத்தப்பட்டு, இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இனவாதிகளின் கொக்கரிப்புக்களுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்புக் கேள்விக்குறியானது.

இந்நிலையில், நல்லாட்சிக் காலத்தில் மக்கள் கருத்தறியும் குழுவிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட தனிநபர்களும் கோரிக்கைகள் பலவற்றையும் முன்வைத்திருந்தனர். இதேவேளை வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இம்மக்களின் நலன்கருதிப் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தமை சிறப்பம்சமாகும். கோரிக்கைகள் பலவும் பின்வருமாறு அமைந்திருந்தன. மலையக மக்கள் இந்நாட்டிலே ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு, இலங்கையிலே வாழுகின்ற ஏனைய இனங்களுக்கு சமமான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்களாக விளங்க வேண்டும். பரம்பரை ரீதியிலான பிரஜைகளாக அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

 

காணியுரிமை, வீட்டுரிமை என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் இவ்வுறுதிப்பாடு  இடம்பெறுதல் வேண்டும். கல்வி, சுகாதாரம், தொழில் என்பவற்றில் சமவுரிமைகள் வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்துறை மற்றும் பொதுத்துறை தொழில் வாய்ப்புக்கள் உரியவாறு மலையகத்தவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபையின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெருந்தோட்டக் குடியிருப்புகள்  உள்வாங்கப்பட்டு, அரச உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். பொது நிர்வாகப் பொறிமுறையின் கீழ் இது அமைதல் வேண்டும். அதிகாரப் பகிர்வு என்று ஏற்படுத்தப்படுகையில், மலையக மக்கள் வாழும் செறிவான பகுதிகளை ஒன்றிணைத்து தனியான ஒரு அதிகார அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். இதனூடாக அபிவிருத்தி, சமூக அபிலாஷைகள் என்பவற்றை நிறைவேற்றிக் கொள்ள வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும் துணை ஜனாதிபதியாக சிறுபான்மை யினருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் கருத்தறியும் குழுவிடம் முன்வைக்கப்பட்டிருந்தன.

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு தேவை என்ற கோரிக்கை 1980 களின் பிற் பகுதிகளிலிருந்தே தீவிரமாக வலியுறுத்தப் பட்டு வருகின்றது. இது சூடான விவாதங் களையும் ஏற்படுத்தியுள்ளது. 2006 – 2010 வரையான காலப்பகுதியில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கை பரிந்துரையும் செய்யப் பட்டது. துரதிஷ்டவசமாக இது குறித்து அறிக்கை வெளிவரவில்லை. இந்நிலையில் கருத்தறியும் குழுவிடம் பல அமைப்புகளும், தனி நபர்களும், அரசியல் கட்சிகளும், மலையக மக்களுக்குத் தனியான அரசியல் அதிகார அலகு தேவை என்று வலியுறுத்தியிருந்தனர். இதுவே சமூகத்தின் தேவையும் கோரிக்கையுமாகும் என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாக இருந்தது. வடமாகாண சபையும் அரசியல் அதிகார அலகு தேவை என்பதனை சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய பரிந்துரைகள்

இதேவேளை மலையக மக்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்களையும் குழு ஆராய்ந்து அதனடிப்படையில் முக்கிய பரிந்துரைகளை அரசிடம் முன்வைத்திருந்தது. இதுகுறித்து கருத்தறியும் குழுவின் உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் விளக்கிக் கூறியிருந்தார். அவையாவன. பிரஜாவுரிமை விடயத்தில் எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படலாகாது. இலங்கையிலுள்ள பிரஜைகள் அனைவரும் சமமான பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய மாகாணத்தை மையப்படுத்தி மலையக மக்களுக்கான தன்னாதிக்க அரசியல் அதிகார அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட விடயங்களில் சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றுத் தன்மை கொண்டதாக அந்த அலகு காணப்பட வேண்டும். பெருந்தோட்டக் குடியிருப்புகள் கிராம முறைமையின் ஒரு பகுதியாக பிரகடனம் செய்யப்படுதல் வேண்டும். பிரதேச சபைகளினால் வழங்கப்படும் அனைத்துப் பொதுச் சேவைகளையும், அனைத்து ஒழுங்கு ரீதியான சேவைகளையும் பெருந்தோட்ட மக்கள் முழுமையாக அனுபவிப்பதற்கான ஏற்பாடுகளைப் புதிய அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும்.

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைகள் அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். சொத்து மற்றும் காணியுரிமைகள் ஒரு முழுமையான உரிமைகளாக உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும். தோட்டங்கள் பிரதேச செயலகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும். இலங்கையிலே பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அல்லது நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு  குறுகிய காலத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய சீர்செய் நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுத் தேசிய மட்டத்தோடு ஒன்றிணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 பெருந்தோட்ட சமூகத்தினர் மற்றும் ஏனைய பின்தங்கியோர் இதனுள் உள்ளடங்கு கின்றனர். பாரபட்சமின்மை குறித்த ஆணைக் குழுவொன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏதேனும் ஒரு இனத்துக்கு பாரபட்சம் காட்டப்படுமானால் இந்த ஆணைக் குழுவிடம் சென்று முறையிட்டு உரிய நீதியினைப் பெற்றுக் கொள்ள முடியும். மலையக மக்களை மையமாகக்கொண்டே இவ்வாணைக்குழுவை ஏற்படுத்த பெரிதும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பொதுச்சேவை மற்றும் உள்ளூராட்சி சேவைகளில் பாரபட்சம் காணப்படுமிடத்து ஆணைக்குழுவிடம் முறையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மேலாக பகிரங்க சேவை மனக்குறை ஆணைக்குழு தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மலையக மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் இத்தகைய குழுக்கள் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் பேராசிரியர் விஜயச்சந்திரன் வலியுறுத்தியிருந்தார். இதுபோன்றே மேலும் பல மலையக மக்களின் நலன் சார்ந்த விடயங்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன

இவற்றுள் பின்தங்கிய நிலையில் உள்ள மலையக மக்களின் நலன்கருதி சீர்செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் ஆழமாக வலியுறுத்தப்படுதல் வேண்டும். இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் பின்தங்கியோரின் நலன்கருதி கல்வியில் முன்னுரிமை, அரசியல் ரீதியான வாய்ப்புகள், மற்றும்  பொருளாதார ரீதியான வாய்ப்புகள் எனப்பலவும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு ரீதியில் இவ்விடயங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால் பின்தங்கிய மக்கள் சாதக விளைவுகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. பின்தங்கிய சமூகங்கள் மேல்நிலைக்கு வருவதற்கும், தேசிய நீரோட்டக் கனவை நனவாக்கிக் கொள்வதற்கும் இத்தகைய உள்ளீர்ப்புகள் உந்துசக்தி யாகியுள்ளன. எனவே இத்தகைய வழிமுறைகள் இலங்கையின் புதிய அரசியலமைப்பிலும் உள்ளீர்க்கப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றது. விரைவில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான ஆரம்ப வரைபையும் கட்சிகளின் பரிந்துரையையும் அமைச்சரவையில் முன்வைக்க அரசாங்கம் முயன்று வருகின்றது. இந்நிலையில் மலையக கட்சிகள் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். புதிய அரசியலமைப்பின் உள்ளீடுகள் எந்தளவுக்கு மலையக மக்களின் அபிவிருத்திக்கு வலு சேர்க்கின்றன? இல்லையேல் எத்தகைய விடயங்களை சேர்த்துக் கொள்ள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்? என்பது குறித்து ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும். கற்றறிவாளர்களின் பங்களிப்பினையும் இதற்கென பெற்றுக்கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்க காலத்தில் கருத்தறியும் குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை களையும் இதன்போது கருத்தில் கொள்ள வேண்டும். இதனை சாதகமாக்கிக் கொள்வதில் அனைத்து கட்சிகளினதும் கூட்டுப் பொறுப்பு அவசியமாகும் என்பதையும் அரசியல்வாதிகள் விளங்கிச் செயற்பட வேண்டும்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு - துரைசாமி நடராஜா

3 COMMENTS

  1. […] சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு: புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் முயற்சிகள் கடந்த கால அரசாங்கங்களினால் தோல்வியடைந்த நிலையில், பொதுஜன முன்னணி அரசாங்கம்  […]

Leave a Reply