யாழ் செம்மணியில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்தும் முகமாகவும் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நீதியின் ஓலம் 2 நீதி கோரும் தொடர் போராட்டமானது இன்றைய தின யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்விடத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமாகவும் பெருமளவிலான மக்களின் பங்கேற்புடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வுகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டதுடன் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மதகுருமார்கள், அரசியற் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தாயக செயலணி செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது செம்மணி உட்பட வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட உறவுகளை நினைந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றான செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நீதியின் ஓலம் 2 போராட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளோம்.
இன்று தொடக்கம் தொடர்ந்து 17ம் திகதி வரை நாங்கள் இந்த செம்மணி போராட்டத்தினை இரவு பகலாக முன்னெடுக்கவுள்ளோம். வடக்கு கிழக்கு தாயக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எம்மோடு இணைய வேண்டும்.
இதில் எவ்வித அமைப்பு, அரசியல் பேதமின்றி எமது மக்களுக்கான நீதி கோரும் இந்தப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக ஒவ்வொருவரும் தமிழ் மக்களை நேசித்து இவ்விடம் வந்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போராட்டத்தின் இறுதி நாளில் நாங்கள் யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்று யாழ்ப்பாணம் ஐக்கி நாடுகள் சபைக் காரியாலத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்க இருக்கின்றோம்.
எனவே எல்லோரும் சேர்ந்து நின்று இதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என பொது அமைப்புகள், அரசியல்வாதிகள், மதகுருமார்கள் என தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது வரை இந்த செம்மணியிலே கிடைக்கப்பெற்றுள்ள 500க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையூடாக ஒரு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதைக் கோரி நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆனால் இன்னமும் எமது மக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. ஆனாலும் எமது போராட்டங்களின் தொடர்ச்சியாக நாங்கள் இந்தப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளோம். இதற்கு மாபெரும் சக்தியாக அனைத்து மக்களும் கைகோர்க்க வேண்டும் என தாயகச் செயலணியின் சார்பில் கேட்டு நிற்கின்றோம் என்று தெரிவித்தனர்.
இந் நீதி கோரும் போராட்டமானது இன்று 14ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை குறித்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்விடத்திற்கு முன்னால் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு இறுதி நாளான 17ம் திகதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை காரியாலயம் வரை பேரணியோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் மகஜர் கையளிக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், வலுச்சேர்க்கும் விதமாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








