சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் ஒரு நாட்டை நேரடியாக இனப்படுகொலைக்குப் பொறுப்பாக்கி சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் இன அழிப்பு நோக்கத்துடன் செயற்பட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10 ஆயிரம் ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) இன்று (19) தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியன்மார் முன்னெடுத்த கொடூரத் தாக்குதல்கள் இனப்படுகொலையா? என்பது குறித்த மூன்று மணிநேர தீர்ப்பு வாசிப்பின் ஆரம்பத்திலேயே நீதிமன்றம் இந்த முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் கொண்ட குழாமின் தீர்ப்பை வாசித்த நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா (Yuji Iwasawa), “ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களை மியன்மார் பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர். பரவலான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான வன்முறைகளில் ஈடுபட்டதுடன், தப்பிச் சென்ற ரோஹிங்கியா மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது” என்று தெரிவித்தார்.

2017 ஆகஸ்ட் மாதம் வடக்கு ராகைன் (Rakhine) மாநிலத்தில் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘தூய்மைப்படுத்தும் நடவடிக்கை’ என்ற பெயரில் மியன்மார் இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்குத் தப்பிச் சென்றனர்.

எனினும், இது பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கை என மியன்மார் வாதிட்டு வந்தது.

இந்நிலையில், 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைத் தடுப்பு சாசனத்தை மியன்மார் மீறியுள்ளதாக அறிவிக்கக் கோரி, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆபிரிக்க நாடான காம்பியா 2019ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தது.

பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குதல், தாயகம் திரும்பும் உரிமை மற்றும் இழப்பீடுகளை வழங்குமாறு மியன்மாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காம்பியா கோரியுள்ளது.

தற்போது சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷின் கொக்ஸ் பசார் (Cox’s Bazar) மாவட்டத்திலுள்ள நெரிசலான முகாம்களில் தீ விபத்து, தொற்றுநோய்கள், மண்சரிவு மற்றும் கடுமையான வேலைக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

“கடந்த 10 ஆண்டுகளாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ரோஹிங்கியா மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எமது சமூகத்திற்கான அங்கீகாரமும் கண்ணியமுமே எமது கோரிக்கை” என ரோஹிங்கியா மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் உல்லா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இறுதியானவை மற்றும் சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியவை என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் நேரடி அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை.

மீறல்கள் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மட்டுமே அறிவிக்க முடியும்.

சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் ஒரு நாட்டை நேரடியாக இனப்படுகொலைக்குப் பொறுப்பாக்கி வழங்கப்படும் முதல் தீர்ப்பு இதுவாகும்.

முன்னதாக 2007ஆம் ஆண்டு பொஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகா படுகொலை விவகாரத்தில் ‘இனப்படுகொலையைத் தடுக்கும் கடமையை மீறியதாக’ மட்டுமே சேர்பியா மீது தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், காஸா போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராகத் தென்னாபிரிக்கா தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கு மற்றும் உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளிலும் இந்தத் தீர்ப்பு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம், இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில் இவ்வாறான தீர்வு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.