ஈழத்தின் முக்கிய கவிஞரான சேரன் உருத்திரமூர்த்தி காலமானார்

ஈழத்தின் முக்கிய கவிஞரும், நவீன கவிதையின் முதல்வரான மகாகவி உருத்திரமூர்த்தியின் மகனுமான சேரன் உருத்திரமூர்த்தி கனடாவில் காலமானார்.

யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த இவர், 1972ஆம் ஆண்டு தனது முதல் கவிதையை வெளியிட்டார்.

எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கிய அவர், ஈழத்தில் கவிஞராகவும் அரசியல் ஊடகவியலாளராகவும் இயங்கினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல், குற்றவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

போர், இடம்பெயர்வு, இழப்பு, ஈழத்தமிழினத்தின் நினைவுகள் என்பவையே இவரது கவிதைகளின் பாடுபொருட்களாக இருந்தன.

இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தமிழ்த் தேசியம் குறித்த “Pathways of Dissent” உள்ளிட்ட ஆய்வு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இதேவேளை, கனடாவில் காலமான புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான சேரனின் மறைவுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இன்றைய (19) பாராளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு தனது உரையின் இறுதியில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகாகவி உருத்திரமூர்த்தியின் புதல்வரான கவிஞர் சேரனின் இலக்கியப் பங்களிப்புகளையும் கல்விப் பணிகளையும் நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் சார்பிலும், ஒட்டுமொத்த நாட்டின் சார்பிலும் இரங்கல் வெளியிட்டார்.

1987 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய நல்லிணக்கமின்மை காரணமாக கவிஞர் சேரன் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

1970 அல்லது 1980களிலேயே நாட்டில் தூரநோக்குடனான நிலையான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால், இத்தகைய சிறந்த அறிஞர்களும் படைப்பாளிகளும் நாட்டிலேயே இருந்திருப்பார்கள் என்றும், நாட்டுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றும் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.