நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தலைவரான நீதிபதி பிரியந்த லியனகே உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இன்று (19) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பிணை கோரி சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

எனினும், பிணை வழங்குவதற்கான விசேட சூழ்நிலைக் காரணிகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்று வழக்குத் தொடுக்கும் தரப்பில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது