இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று (23) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக அனுராதபுரம் – நாச்சதூவ குளம் வற்றிப்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அனுராதபுரம் பண்டிகெடுவ பகுதியில் பெருமளவிலான மிளகாய் பயிர்களும், திரப்பனை – மாவத்தவெவ பகுதியில் தர்பூசணி மற்றும் பூசணிப் பயிர்களும் நீரின்றி காய்ந்துபோகும் நிலையை எதிர்நோக்கியுள்ளன.
அதேநேரம், பொலன்னறுவை – ரத்மலே பகுதியில் பயிர்கள் அழிவடைந்துள்ளமையால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அங்குள்ள கோனமலயாவ குளமும் வற்றி வருவதால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், மாத்தளை – வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட லெஹெடீயங்கல கிராமத்தில் வாழும் சுமார் 500 குடும்பங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதுடன், உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டமொன்றை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அங்கு சில பகுதிகளில் தினமும் 4 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மொனராகலை மாவட்டத்தின் பிபில மற்றும் மெதகம பகுதிகளுக்குப் போத்தல்கள் மற்றும் தாங்கி ஊர்திகள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, மேல், வட மத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



