வறட்சியான காலநிலையால் 81,865 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால்  81,865 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.

எல் நினோ தாக்கத்தினால் நாட்டில் ஒருசில பகுதிகளில் வறட்சியான காலநிலை தீவிரமடைந்துள்ளது. கிழக்கு,வடமத்திய,ஊவா,சப்ரகமுவ மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் வறட்சியான காலநிலை தீவிரமடைந்துள்ளதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுக்கமைய,மொனராகலை மாவட்டத்தில் 33,023 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28253 பேர், அம்பாறை மாவட்டத்தில் 8783 பேர், பதுளை மாவட்டத்தில் 7876 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 2646 பேர், காலி மாவட்டத்தில் 515 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 499 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளர்.

இவர்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவம் முன்னெடுத்துள்ளதுடன், சுகாதார பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.