அரசாங்கத்துக்கு சாதகமான போராட்டத்தை ஜனநாயகம் என்றும்,அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் எவ்வாறு அடையாளப்படுத்துவது. எமது போராட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடைய தேவையில்லை. அரசாங்கமே பயங்கரவாதமாக செயற்படுகிறது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள்,கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பௌத்த மதத்தின் பாதுகாவலன் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் முதலில் பௌத்த மதத்தின் அடிப்படை கொள்கைகளையும் அறத்தையும் பின்பற்ற வேண்டும். வெறுப்புக்களை முன்னிலைப்படுத்தி செயற்படும் இவர்கள் பௌத்த மத அறக்கருத்துக்களை குறிப்பிடுவது கேலிக் கூத்தாக உள்ளது.
பௌத்த மதத்தின் சிறந்த கொள்கை மற்றும் கோட்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது. ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக அரசாங்கம் முத்திரையிடுகிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை (8) தேசிய மக்கள் சக்தியினரின் ஒழுங்குப்படுத்தலுடன் தான் கொழும்பில் போராட்டம் இடம்பெறவுள்ளது. அரசாங்கத்துக்கு சாதகமான போராட்டம் ஜனநாயகம் என்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்றும் எவ்வாறு குறிப்பிட முடியும்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக போராட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடைய வேண்டிய தேவையில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு விசேட கவனம் செலுத்த வேண்டும்,போராட்டகாரர்களை விசேடமாக கவனிக்க வேண்டும் என சிரேஷ்ட அரசியல்வாதிகள் குறிப்பிடுவது ஜனநாயகத்துக்கு எதிரான சமிக்ஞை ஆகும்.
ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்க அரசாங்கமே பயங்கரவாதிகளை போல் செயற்படுகிறது. அரசாங்கத்தின் வன்முறையான செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு எதிராக அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும் என்றார்.