அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவது மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கவலைகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரங்களோ அல்லது அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள வேறு எந்த அதிகாரங்களோ அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்புக்கு வெளியே பயன்படுத்தப்படாது என்று உறுதியளித்தார்.
அரசியலமைப்பு மாற்றங்கள் காரணமாக எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டாலும், தேவையான அரசியல் மாற்றங்களை முன்னெடுப்பதற்காக அந்த இடரை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் பதவியை விட்டு விலகத் தயாராக இருக்கும் ஒரு நபர். பதவியில் தொடர்ந்து இருப்பதற்கான எண்ணத்துடன் நான் இங்கு வரவில்லை” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
தேவையான மாற்றங்களை கொண்டுவருவதற்கு இடர்களை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இடர் இல்லாமல் மாற்றம் நிகழும் என நான் நம்பவில்லை. இடர்களை ஏற்பதன் மூலமே மாற்றம் எப்போதும் நிகழ்கிறது” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பில் நிபுணர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, அதன் பின்னர் தீர்மானங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.



