கடந்த கால காயங்கள் ஆறவில்லை என்பதை செம்மணி வெளிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

இலங்கையில் கடந்த காலத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதை செம்மணி மனிதப் புதைகுழி தெளிவாக நினைவூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உண்மையையும் நீதியையும் தேடித் தொடர்ந்து போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், களத்தில் பணியாற்றும் குழுக்களின் முயற்சிகள் உறுதியான பலன்களைத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்குச் சென்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பப் பிரதிநிதிகளிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்டதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடும் முயற்சியில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் கடந்த கால வடுக்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதற்கான மிகக் கடுமையான நினைவூட்டலாகவே யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விளங்குகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் உண்மையைத் தேடியும் நீதிக்காகப் போராடியும் வருகின்றனர்.

செம்மணி மனித புதைகுழி தளத்திற்கு விஜயம் செய்தபோது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டோம்.

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதி, பல தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளுடன் பிணைக்கப்பட்ட ஒரு துயர வரலாற்றைக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களின் அடையாளமாக விளங்கும் இப்பகுதியில், அண்மைய காலங்களில் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் தடயவியல் நிபுணர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிகளில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் எலும்புக்கூடுகள், ஆடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற சான்றுகளும் இப்புதைகுழிகளில் இருந்து வெளிக்கொணரப்பட்டு வருவது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறியும் உரிமை பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வருவதாகவும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் மீது தங்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கண்ணீருடன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சர்வதேசத்தின் நேரடித் தலையீடு அவசியமென்றும், உண்மையான நீதியும் பொறுப்புக்கூறலும் சர்வதேச விசாரணை மூலமே சாத்தியமாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நேரில் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், இலங்கையில் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கும், உண்மை மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான முன்னெடுப்புகளுக்கும் தங்களது முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.