மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான அவசர சிகிச்சை பிரிவு கட்டடமானது, இந்திய அரசியல் நன்கொடையுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாளப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சர் சார்பில் முதலாவதாக, ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரத்துறைக்காக 600 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாகவே, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தந்துள்ளார். ஏனைய மாவட்டங்களை காட்டிலும் மன்னார் மாவட்டத்தில் சுகாதார சேவையில் பற்றாக்குறை காணப்படுகிறது. இருப்பினும் வைத்தியர்கள், சுகாதார சேவையாளர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது.
இந்த அவசர சிகிச்சை பிரிவு கட்டடமானது, இந்திய அரசாங்கத்தின் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நன்கொடை நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகின்றது. இதற்காக இந்தியப் பிரதமர், இந்திய அரசாங்கம், இந்திய மக்கள் மற்றும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏனைய மாவட்ட பொது வைத்தியசாலைகளில் ஒப்பீட்டளவில் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு இடமாகவே மன்னார் வைத்தியசாலை காணப்பட்டது. எனினும், பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும் இங்குள்ள வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் சேவைக்கு கௌரவம் அளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி வருகைத் தந்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின்படி, வளமான வாழ்க்கையையும் ஆரோக்கியமான எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டமானது நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாக மாறி வருகிறது. போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். எனவே, இங்குள்ள மக்களுக்கும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தரமான சுகாதார சேவையை உறுதி செய்வது அவசியமாகும்.
புதிய அவசர சிகிச்சை பிரிவின் கட்டுமானப் பணிகள் 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள் நிறைவு செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும்.243 மில்லியன் ரூபா செலவில் வைத்தியர்களுக்காக நிர்மாணிக்கப்படும் 4 மாடிகளைக் கொண்ட புதிய விடுதிக் கட்டடம் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவுப்படுத்தப்படும்.
230 மில்லியன் ரூபா செலவில் புதிய மகப்பேறு பிரிவு அமைப்பதற்கான விலைமனுக்கோரல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டிற்குள் ஆரம்பிக்கப்படும்.
250 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய ஊவு ஸ்கேனர் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இதற்கான விலைமனுக்கோரல் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இயந்திரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கையளிக்கப்படும்.
வைத்தியசாலையின் சேமிப்பு மற்றும் களஞ்சிய கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்காக கூடுதல் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முதன்முறையாக மன்னார் வைத்தியசாலைக்கு உள்வாங்கு பயிற்சி வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மேலும் சிலர் நியமிக்கப்படுவர். எதிர்வரும் மாதம் 31 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நியமிக்கப்படவுள்ள 2,600 புதிய தாதியர்களில் ஒரு தொகுதியினர் மன்னார் வைத்தியசாலைக்கு பணிக்கமர்த்தப்படுவார்கள்.அதேபோல் எதிர்வரும் மாதம் நியமனம் பெறவுள்ள 1,100 குடும்ப சுகாதார அதிகாரிகளில் ஒரு பகுதியினர் இந்த மாவட்டத்துக்கு இணைக்கப்படுவர்.
மாகாண சபைக்குட்பட்ட நியமனங்களின் கீழ், நாளை மறுதினம் (18) 300 சுகாதார உதவியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன்,அவர்களில் ஒரு தொகுதியினர் மன்னார் வைத்தியசாலைக்கு நியமிக்கப்படுவர்.ஒட்டுமொத்த மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



