கிழக்கு மாகாணம் தொடர்பில் கூடுதலாக சிந்திக்கவேண்டும்! | மட்டு.நகரான்

‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்’ இன்று கிழக்கு தமிழர்களுக்கு முழுமையாக பொருந்தக்கூடிய பாடல் வரிகளாக இது காணப்படுகின்றது.

கிழக்கின் நிலைமை என்பது இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் மாவட்டமாக இருக்கின்ற காரணத்தினால் அதன் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மிக அதிளவில் நிலப்பரப்பினைக்கொண்ட மாகாணமாகவுள்ளது. கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலையாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் காரணமாக அந்த நிலைமையிழக்கப்பட்டுவருகின்ற நிலையில்  மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகராகவும், தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணம் இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழர்களின் நிலைமைகள் குறித்து கடந்த வாரங்களில் எழுதியுள்ள பத்திகளில் பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை உள்ளீர்க்கவேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றோம். அனைத்து வளங்களும் கொண்ட இந்த மாகாணத்தில் முதலீடுகளைச் செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நிலைமையினைக் கட்டியெழுப்பமுடியும் என்ற எமது கோரிக்கை தொடர்பில் இன்று பல்வேறு கருத்தாடல்கள் முன்னெடுக்கப்படுவதை காணமுடிகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் கோரிக்கையென்பது நியாயமானதும் மிகவும் தேவையானதுமான ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இந்;த முதலீடுகளை யார் செய்யவேண்டும், எவ்வாறான முதலீடுகளைச் செய்யவேண்டும் என்ற வகையிலான பல்வேறு கோரிக்கைகள் இன்று வலுவடைந்துவருகின்றன.

யுத்தம் இந்த நாட்டில் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையில் சிங்கள அரசுகளினால் முதலீடுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. புலம்பெயர் அமைப்புகள் தடைசெய்யப்பட்ட நிலையிலேயே இந்த கோரிக்கையினை சிங்கள பேரினவாத அரசுகள் முன்னெடுத்துவந்தன.

இந்த நிலையில் அன்று முதலீடுகள் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலிருந்த காணிகள் தெற்கிலிருந்துவந்த பேரினவாத மனநிலை கொண்ட கூட்டங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன. அவற்றில் அதிகமான காணிகள் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில்தான் சிங்கள பேரினவாதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
தமிழர்கள் பகுதிகளில் செய்யப்படும் முதலீடுகள் என்பது சிங்கள பேரினவாதத்திற்கு தமிழர்களின் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதற்காக வழங்கப்படும் சந்தர்ப்பமாக கொள்ளவேண்டும் என்பதான பல்வேறு விமர்சனங்களை நாங்கள் காணமுடிகின்றது. இவ்வாறான விடயங்கள் உண்மையான  விடயங்களாகும். கிழக்கு மாகாணம் அதிகளவில் பறிபோவதற்கான காரணங்களும் இந்த முதலீடுகளாகவேயுள்ளது.
இவ்வாறான நிலையில் தமிழர்கள் விழிப்பாகயிருக்கவேண்டியது மிக முக்கியமாகும். முதலீடுகள் என்பது தமிழர்களின் பகுதிகளை பலப்படுத்துவதாகவிருக்கவேண்டுமே தவிர எமது இருப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாகவோ எமது உழைப்பினை உறிஞ்சிச்செல்லும் செயற்பாடுகளாகவோ இருக்ககூடாது.

இதன் காரணமாகவே நாங்கள் புலம்பெயர் தமிழர்களை கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளவருமாறு அழைப்பு விடுத்துவருகின்றோம். தமிழர்கள் செய்யும் முதலீடு என்பது எதோவொரு வகையில் தமிழர் தாயகத்தினைப் பலப்படுத்தும் விடயமாயமாகவேயிருக்கப்போகின்றது. ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிங்கள தேசத்தின் பாரியளவிலான படையெடுப்பு, முதலீடு என்ற போர்வையில் கிழக்கில் முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தற்சார்பு பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பலமாக முன்னெடுக்கப்படுகின்றது.எனினும் அது தொடர்பான முறையான திட்டங்கள் எதுவும் முன்வைக்காத நிலையே காணப்படுகின்றது.
இன்று கிழக்கு மாகாணத்தில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுளோரினால் கிழக்கு மாகாண தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை. சுற்றுலாத்துறையில் 75வீதத்திற்கும் அதிகமான முதலீடுகள் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் பயனை அவர்களும் அவர்கள் சார்ந்தவர்களுமே அனுபவித்துப்போகும் நிலை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி கோவில்குளம் பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் சுமார் 5000பேர் கடமையாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 95வீதமானவர்கள் தமிழ் இளைஞர் யுவதிகள். அவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் அவர்களுக்கு மிகவும் குறைந்த வேதனங்கள் வழங்கப்பட்டு அதிகளவில் வேலைகள் வாங்கப்படுவதுடன் அவற்றின் மூலம்பெறப்படும் உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றது. குறித்த ஆடைத்தொழிற்சாலையானது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருடையதாகவிருக்கின்றது.

மூலப்பொருளைக் கொண்டுவந்து முடிவுப்பொருளாக கொண்டுசெல்கின்றனர். இதன்மூலம் இங்கு பெறப்படும் பயன்கள் அனைத்தும் வேறு எங்கேயோ பயன்பெறுகின்றது.

இதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை செய்கையும் ஒன்றாகவுள்ளது. இலங்கையில் இரண்டாவது அதிக மரமுந்திரிகை உற்பத்திசெய்யப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளபோதிலும் தமிழர் பகுதியிலிருந்து ஒரு வெளியீடும் இல்லாதநிலையே காணப்படுகின்றது. மரமுந்திரியை செய்கையில் 99வீதமான செய்கை தமிழ் பகுதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.ஆனால் நாங்கள் முந்திரியம் பருப்பு வாங்குவது என்றால் வேறு பகுதிகளுக்கு சென்று அதிக விலைகொடுத்தே வாங்கும் நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு பல மூலப்பொருட்கள் இங்குள்ளபோதிலும் அதன் முடிவுப்பொருட்களை வேறு இடத்தினை சேர்ந்தவர்கள் தீர்மானிக்கும் நிலையே காணப்படுகின்றது. எங்களிடமுள்ள இவ்வாறான வளங்களுக்கு சரியான முதலீடுகளை எம்மவர் செய்யும்போது இங்கிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யக்கூடிய பல பொருட்களை உற்பத்திசெய்யக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்.

இன்று வடக்கில் பல்வேறு உற்பத்திகள் பல்வேறு பெயருடன் வரும் நிலையில் அனைத்துவளங்களும் கொண்ட கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழனின் உற்பத்தியும் வெளிவரவில்லையென்பதே மிகவும் கவலைக்குரிய விடமாகவுள்ளது. கடந்த காலத்தில் யுத்தம் மௌனிப்பு, சுனாமி போன்ற காலப்பகுதிகளை தொடர்ந்து பெருமளவான அரசார்பற்ற நிறுவனங்கள் இயங்கியபோதிலும் முறையான எந்த திட்டத்தினையும் முன்னெடுக்கவில்லையென்பது கடந்த காலத்தில் உணரப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் எமது மக்களை வைத்து அரசார்பற்ற நிறுவனங்களும் அதனுடன் இணைந்தவர்களும் தங்களது தேவைகளை நிறைவேற்றினார்களே தவிர எந்தவித உற்பத்திசார் தற்சார்பு பொருளாதார திட்டத்தினை முன்னெடுக்கவில்லை.

இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அடைக்கப்பட்ட தயிர், ஜோக்கட், பால் போன்றவை சிங்கள பகுதிகளிலிருந்தே கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இலங்கையில் பால் உற்பத்தி அதிகமாக பெறப்படும் மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் கருதப்படுகின்றது. ஆனால் எந்த உற்பத்தியும் இல்லை. இதேபோன்றுதான் தென்னைசார் உற்பத்திகள், நெல்சார் உற்பத்திகள் என பெருமளவான முடிவுப்பொருட்கள் வெளியிடங்களில் குறிப்பாக சிங்கள பகுதிகளிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்படுகின்றன.

ஆனால் ஒரு உற்பத்தியும் இங்கிருந்துவருவதில்லை. ஆனால் நெல், பால், தேங்காய், முடிவுப்பொருட்களாக மீண்டும் எங்களிடம் வருகின்றன. இதன்மூலம் வேறு ஒரு பகுதியினர் பொருளாதார ரீதியாக பலமடையும்போது நாங்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவினையே தொடர்ந்து சந்திக்கும் நிலையினைக் காணமுடிகின்றது.

நாங்கள் எமது மூலப்பொருட்களைக்கொண்டு முடிவுப்பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை அமைக்கும்போது அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை பெறுவதுடன் பொருளாதார ரீதியான பலமடையும் ஏற்றுமதிகளையும் இங்கு முன்னெடுக்கமுடியும்.
இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்தேடி புலம்பெயரும் நிலை அதிகளவில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது அதுதடுக்கப்பட்டு கிழக்கில் தமிழர்களின் விகிதாசாரம் பாதுகாக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணம் தொடர்பில் சிந்திப்பவர்கள் இது தொடர்பில் கூடுதலாக சிந்திக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.