தீர்வுகளுக்குத் தேர்தலாவது வழிவகுக்குமா………? | பி.மாணிக்கவாசகம்

104 Views

நாட்டில் நெருக்கடிகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பொருhளதாரப் பிரச்சினை பல்வேறு வடிவங்களில் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதே இதற்கான காரணமாகும். நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ‘இடைக்கால அரசாங்கம்’ அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அது ஆக்கபூர்வமான திசை வழியில் செயற்படுகின்றதா என்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியிருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க பழுத்த அரசியல்வாதி. மேற்கத்திய நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றவர். அவரால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்றவாறான நம்பிக்கைகள் அவர் பிரதமராகப் பதவி ஏற்றபோது வெளிப்பட்டிருந்தன. அதேவேளை, தேர்தலில் மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகிய அவரை பிரதமராக நியமிக்க முடியுமா என்ற அரசியலமைப்பு ரீதியான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கூட முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆயினும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் நாட்டின் இழிநிலை பொருளாதாரத் தன்மைகள் குறித்த தகவல்கள் அவரால் வெளிக்கொண்டு வரப்பட்டன. நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்கின்ற ‘நெருக்கடி முகாமையாளராகவே’ தான் செயற்படப் போவதாக ஆரம்பத்தில் அவர்; தெரிவித்திருந்தார். நெருக்கடி முகாமையாளருக்கு நெருக்கடிகளைத் தணிப்பதே பொறுப்பு. அதுபற்றியே பேச முடியும். செயற்பட முடியும். அரசியமைப்பு மாற்றங்கள் தொடர்பில் தனக்குத் தொடர்பில்லை என்று ரணில் விக்கிரமசிங்கவே கூறியிருந்தார்.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் இராணுமயப் போக்கும், எதேச்சாதிகார நடவடிக்கைகளும், தீர்க்கதரிசனமற்ற, சுயவிருப்ப வேலைத்திட்ட நடைமுறைகளுமே நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழியில் வீழ்த்தி இருக்கின்றன என்பது பரவலான கருத்தாகும். இந்த நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும். அவர் உட்பட அனைத்து ராஜபக்சக்களும் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். முழு அரசாங்கமும் பதவி விலகி, நாட்டில் புதிய அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி பொருளாதாரச் சுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பதவி விலகி வீடு செல்ல வேண்டும் என பகிரங்கமாகக் கோரி நடத்தப்படுகின்ற போராட்டத்தின் மையப் புள்ளியாக காலிமுகத் திடலின் கோத்தா கோ கம போராட்டக் களம் திகழ்கின்றது. ஆனால் ஜனாதிபதி பதவியை விட்டு ஒருபோதும் விலகிச் செல்ல மாட்டேன். பதவிக்காலம் முழுதும் நானே ஜனாதிபதியாக இருப்பேன் என்று கோத்தாபாய ராஜபக்ச பிடிவாதமாகக் கூறி வருகின்றார். அவருடைய இந்த நிலைப்பாடு அவரைப் பதவி விலகக் கோரி போராடுகின்ற மக்களைப் பெரும் விசனத்துக்கும் சீற்றத்துக்கும் உள்ளாக்கி இருக்கின்றது.

பொருளாதாரச் சுமைகளினால் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கின்ற மக்களின் கோரிக்கையாகிய ‘அரசியல் மாற்றம்’, ‘அரசியல் கட்டமைப்பு மாற்றம்’ என்பற்றுக்குப் பொதுத் தேர்தலே தீர்வாகும். எனவே பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்காக சகல கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டும். ஆறு மாத காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தி மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் மக்கள் விரும்பியவாறு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படவில்லை. மாறாக, ஆளும் கட்சியாகிய ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன கட்சியின் அரசாங்கமே மீண்டும் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் பலம் பொருந்தியதாக – மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தனி உறுப்பினராகிய ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க இப்போதைக்குப் பொதுத் தேர்தல் நடத்தப்படமாட்டாது. கடந்த பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைகின்றபோதே தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்தக் கூற்று, குறுகிய காலத்திற்கான தற்காலிக அரசாங்கத்தில் பிரதமர் பதவியேற்றமைக்கு நேர்மாக அடுத்த தேர்தல் வரையிலும் தான் பதவியில் இருக்கப் போவதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. தற்காலிக அரசாங்கத்தின் பிரதமராகிய அவர் நிரந்தரமாக அந்தப் பதவியில் நீடிப்பதற்கான தனது பதவி ஆசையை வெளியிட்டிருப்பதாகவே எதிரணி அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது. இதனையடுத்து, அவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எதிரணி, மற்றும் அவருடைய செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்கள் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியாகிய பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக அரசாங்கமும் குழப்பகரமான நிலைமையைச் சந்தித்திருக்கின்றது.

இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் ஆட்சிப் பொறுப்பைத் தாங்கள் ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதி;காரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் பதவி விலகினால் நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத நிலைமை உருவாகும். அத்தகைய நிலையில் பொதுத் தேர்தல் ஒன்றின் ஊடாகவே புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும். எனவே உடனடியாக ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற திசைவழியிலேயே நாட்டின் அரசியல் நிலைமைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டரீதியான சிக்கல்கள் இருந்த போதிலும், நாட்டு மக்களுடைய விருப்பத்திற்கமைய பொதுத் தேர்தலை நடத்தி, நம்பிக்கைக்குரிய ஓர் அரசாங்கத்தை நாட்டில் உருவாக்க முடியும். ஆனால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை இல்லை என்பதே இப்போதுள்ள அரசியல் சிக்கலாகும்.

இது ஒரு புறமிருக்க, ஏதாவது ஒரு வழியில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தினாலும், பொறுப்பாகச் செயற்படத் தக்க வகையிலான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியுமா என்பதும் கேள்விக்கு உரியதாகவே இருக்கின்றது. நாடு இப்போது பொருளாதாரப் பிரச்சினை காரணமாகப் பல்வேறு நெருக்கடிகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கின்றது. இதனால் கொந்தளிக்கின்ற கடலில் சிக்கி மூழ்கப் போகின்ற கப்பல் ஒன்றினுடைய நிலைமையிலேயே நாடு இப்போது இருக்கின்றது.

எனவே, பேரழிவில் இருந்து நாட்டை மீட்பதற்குரிய ஆளுமையும், சரியான தீர்மானங்களை மேற்கொள்ளத் தக்க வலிமையும், செயற்றிறனையும் கொண்ட ஓர் அரசியல் தலைமையே, நாட்டின் இப்போதைய தேவையாகும். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத்தக்கதோர் அரசியல் தலைமை அரச தரப்பிலோ அல்லது எதிர்ணித் தரப்பிலோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஏனெனில் அரசாங்கத் தரப்பில் நாட்டின் நலன்களைக் கருத்திற் கொண்டு செயற்படத்தக்க தலைமைகள் இல்லை என்பதைக் கடந்த மற்றும் அண்மைக்கால ஆட்சி நிலைமைகள் எடுத்துக் காட்டி இருக்கின்றன. அத்துடன் நடப்பு அரசியல் செயற்பாடுகளும் அதனை உறுதி செய்பவையாகவே அமைந்திருக்கின்றன.

நாடு பேரின்னலில் சிக்கியுள்ள இந்தத் தருணத்தில் பேரழிவில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்கத்தக்க வேலைத்திட்டங்களையோ அல்லது அரசியல் வழித்தடங்களையோ கொண்டுள்ள அரசியல் தலைiமையை எதிரணியினர் மத்தியிலும் காண முடியவில்லை. பழைய அரசியல் பெருச்சாளிகளே மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையையே காண முடிகின்றது. இந்த நிலையில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டாலும் கூட நாட்டிற்கு அவசியமான வலுவான அரசாங்கத்தை உருவாக்க முடியுமா என்பது சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது.

கோட்டா கோ கம போராட்டத்தில் இனைஞர் யுவதிகளும் அரச தனியார் ஊழியர்களுமாகிய நடுத்தர வகுப்பினர் முன்னிலையில் செயற்பட்டனர். நியாயமான போராட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நிதானமாக சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். இது அவர்களின் முன்னுதாரமான செயற்பாடாகும். ஆனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய அரசியல் தலைமைத்துவத்தை நோக்கியதாக அவர்கள் வளர்ச்சியைக் காட்டவில்லை. வளர்ச்சிப் போக்கில் நகரவும் இல்லை.

ஊழலும், ஏமாற்றுக்களும் மலிந்துள்ள அரசியல் கட்டமைப்பிற்குள்ளே செயற்படுகின்ற அரசியல் தலைமைகளின் பின்னால் செல்வதற்கு அவர்கள் முற்பட்டிருக்கின்றார்களோ என்று சந்தேகம் கொள்ளும் அளவில் அவர்கள் கட்சி அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். இது இனவாதமும் மதவெறியும் கொண்ட சிங்கள பௌத்த அரசியல் போக்கில் இருந்து கோத்தா கோ கம போராட்டக்களம், பன்மைத்துவ அரசியல் சிந்தனையுடன் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது.

ஒட்டு மொத்தத்தில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பதவி விலகி, அரசாங்கமும் முழுமையாகப் பதவியைத் துறந்தாலும், தேர்தலின் ஊடாகக்கூட நாடு அரசியல் ரீதியாக விமோசனம் அடையுமா என்ற ஐயப்பாட்டையே ஏற்படுத்தி இருக்கின்றது.

Leave a Reply