இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை (07) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.