கறுப்பு ஜூலை இனப்படுகொலையும்  மாறாத சிங்கள தேசமும்-சோபிகா கிருஷ்ணமூர்த்தி

53 Views

காலனியாதிக்கவாதிகளின் பிடியில் இருந்து எப்போது சிங்களவர்களிடம் இலங்கை சென்றதோ அப்போதிருந்து தமிழர்களுக்கான அரசியல் மற்றும் உரிமைகள் நிராகரிக்கப்பட்டன என வரலாறுகள் சான்று பகர்கின்றன.

இலங்கைக்குச் சுதந்திரம் எப்போது கிடைத்ததோ அன்று முதல் தமிழர்களின் சுதந்திரம் பறி போனது என்பது தான் நிதர்சனமான உண்மை. 1948ல் சுதந்திரம் அடைந்ததற்கு பிற்பாடு தனிச்சிங்கள சட்டமும், பௌத்த மயமாக்கலும் பிரகடனப்படுத்தப்பட்டன.

தமிழர்கள் மீதான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் சாதாரணமாக தொடங்கப்பட்டன. 1956-இல் ஈழத்தமிழர்களுக்கு எதிராக முதலாவது இனவெறி வன்முறை தாக்குதல் கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் அரங்கேற்றப்பட்டது. இதில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சிங்கள மொழியை ஆட்சி மொழியாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லோயா திட்டத்தில் இனவெறி வன்முறை வெடித்தது. இந்த தாக்குதல் ஈழப் போராட்டத்தின் அவசியத்தைத் தமிழர்களுக்கு உணர்த்தியது. அவர்களில் தாயகம் பற்றிய அக்கறைகளை ஏற்படுத்தியது.

மீண்டும் 1958இல் இனக்கலவரம் வெடித்தது. இந்த தாக்குதலின்போது.  300 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

மேலும் 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் 11 பேர் இலங்கை காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டார்கள். 1977ஆம் ஆண்டு 500க்கு மேற்பட்ட தமிழர்கள் சிங்களவர்களால் கொல்லப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக 1981தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகமான ஈழத்தமிழர் வரலாற்று, பண்பாட்டு பொக்கிஷமான யாழ் நூலகம் 1981, மேமாதம் 31ம் திகதி அரசியல் பழிவாங்கலால் எரிக்கப்பட்டது.

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை  உலக வல்லாதிக்க நாடுகள் துணைகொண்டு அழித்த சிங்கள இனவெறி அரசின் கோரத்தாண்டவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியான நிகழ்வுகளில் மிக முக்கியமானது இனப்படுகொலை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயமல்ல. இனப்படுகொலையைத் தமிழர்கள் மீது நடத்துவதென்பது இலங்கைக்குப் புதியதல்ல. அந்த வகையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி உலகத்தையே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது அதுதான் ஜூலைக் கலவரம் என்று அழைக்கப் படுகின்றது. இன்று வரை தமிழர்கள் அனைவரும் ஜூலை மாதம் வந்துவிட்டால் அந்த மாதத்தினை கறுப்பு ஜூலை என்றுதான் அழைக்கிறார்கள்.

சிங்கள இனவெறியர்களாலும்  இனவெறி அரசாலும் நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை இன்றளவும் உலகத் தமிழர்களின் மனதில் ஆறாத ரணமாக, அணையாத நெருப்பாக நின்று கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு நியாயம் இல்லாமல் இல்லை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்பாவித் தமிழர்கள் நிர்வாணமாக்கப் பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள். தமிழர்களுடைய கடைகள் சூறையாடப்பட்டு, வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. உடைமைகள் எல்லாம் திருடப்பட்டன. உலகை வந்தடைந்து தம் பாதங்களை மண்ணில் பாதிக்காத பலநூறு பச்சிளம் குழந்தைகளும் கொல்லப்பட்டுத் தெருவில் வீசப்பட்டன. தமிழர்களின் உடல்களை நிர்வாணமாக்கி, நடுவீதியில் எரித்து, அதன் மீது ஒரு கொலைவெறித் தாண்டவம் ஆடி வெறியைத் தீர்த்துக் கொண்டனர் சிங்கள இனவெறியர்கள்.

இதற்கும் மேலாக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த குட்டிமணி, ஜெகன் உட்பட 53 தமிழர்கள் சிங்களக் கைதிகளால் கொலை செய்யப்பட்டனர். குட்டிமணி என்னைத் தூக்கிலிட்டால் எனது கண்களை ஒரு தமிழனுக்கு பொருத்துங்கள். கண்களாவது தமிழ் ஈழத்தைக் காண வேண்டுமென்று அரசாங்கக் கைதியாக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தபோதும் குட்டிமணியின் கண்கள் உயிரோடு இருக்கும்போது தோண்டி எடுக்கப்பட்டு பூட்ஸ் காலணியால் நசுக்கப்பட்டன.

இப்படிக் கொடூரமான சம்பவங்களை இன ரீதியான அடக்குமுறை, இனரீதியான இன அழிப்பு என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலும்  இதனை இனக் கலவரம் என்று கூறுகிறார்கள் கலவரம் என்பது இரண்டு தரப்பு மக்களுக்கும் அதாவது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மாறிமாறி நடந்திருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதை நாம் இனக்கலவரம் என்று சொல்ல முடியும்.

ஆகவே இங்கு நடந்தது இன அழிப்பு ஆகும் திட்டமிட்டு சிங்கள பேரினவாதம் தமிழர்களை அடக்குவதென்று கூறி  அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த அந்த கறுப்பு ஜூலை மாதத்தை  நினைவு கூர வேண்டிய கடமை  தமிழராகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

வார்த்தைக்கு வார்த்தை புத்தனுடைய நாடு என்று சொல்கிறார்கள். இலங்கை நாட்டில் உண்மையில் புத்தர் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாட்டை புத்தரே சபித்திருப்பார். அந்த அளவிற்கு தமிழர்கள் மீது இன ரீதியான அடக்குமுறைகளும் இன்று வரைக்கும் பல்வேறு கோணங்களில் நடந்து வருகின்றது.

இன அழிப்பு நடந்ததற்கான காரணம் என்ன என்பதை அவர்களுடைய தரப்பிலிருந்து கேட்டால் விடுதலை புலிகள் இலங்கை ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள், படுகொலை செய்தார்கள். அதற்குப் பழி தீர்ப்பதற்காகத் தான் நாங்கள் தமிழர்களை தாக்கினோம் என்று கூறினார்கள். கோழைத்தனத்தின் உச்சக்கட்டம் என்பது இதுதான். விடுதலைப்புலிகள் இராணுவம் மீது தாக்குதல் செய்திருந்தால் அறம் தவறாத இராணுவமாக இருந்திருந்தால், அவர்கள் விடுதலைப் புலிகளை அல்லவா தாக்கி இருக்கவேண்டும். ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் புலிகள் மீது தாக்குதல் நடத்தப் பயந்து போனதன் காரணமாகவே அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகள் மீது இருந்த கோபத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஜூலை இனப்படுகொலை தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜெயவர்த்தனா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் “யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழர்கள் கவலைப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். என்றால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை சிங்களவர்கள் மீது தான் எனக்கு அக்கறை உள்ளது. தமிழர்கள் நசுக்க படுவதைப் பார்த்து சிங்களவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று மகிழ்ச்சி அடைய வைக்கும் வேலைகளை தொடர்ச்சியாக செய்வேன் என்று கூறியுள்ளார்.” இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனில் அதாவது மிகத்தெளிவாக அவர் கூறுகின்றார், தமிழர்களை  இன அழிப்பு நடத்துவதை சிங்களவர்கள் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் நான் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு இனரீதியான  அடக்குமுறைகளையும், ஒடுக்கு முறைகளையும் செய்வேன் என மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் வாய்ப்புத் தேடி காத்திருந்தவர்கள் விடுதலைப்புலிகளைக் காரணமாக வைத்து இனவழிப்பை மேற்கொண்டார்கள். இந்த மண்ணில் சிங்களப் பேரினவாதம் எவ்விதமான அடக்குமுறைகளை மேற்கொண்டது என்பது மிகத் தெளிவாகச் சர்வதேச அரங்கில் பதிவு செய்யப்படுவதற்கு  இந்த ஜூலை மாதம் நடந்த இன அழிப்பு மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்தது.

காலிமுகத்திடலில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் தமிழர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் பேசப்பட்டு வந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவு காலமும் தமிழர்களுக்கு எதிரான படுகொலை நடந்து கொண்டு வந்தது, போராட்டம் நடை பெற்றது  எந்த சிங்களவர்களாவது போராட்டத்தில் பங்கு கொண்டார்களா!! இல்லை. கேள்வி கேட்டார்களா? இல்லை!! இனம் என பிரிந்தது போதும் என்று ஸ்டேட்டஸ் போடும் இளைஞர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது அந்தப் போராட்டமும் இந்தப் போராட்டமும் ஒன்றல்ல அரிசி, பெற்றோல், பருப்பு என்பதற்கு விலை கூடிவிட்டது என்று போராடுபவன் எங்கே. தன்னுடைய இனத்திற்காக போராடி அழிக்கப்பட்ட தமிழ் இனம் எங்கே. கூறுங்கள்!  சிறிது காலத்தில் அவர்களுக்குப் பெற்றோலும் அரிசியும் கிடைத்துவிட்டால் அவர்கள் தங்களுடைய வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். தமிழர்களுக்காக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறார்களா இல்லை! காலிமுகத்திடலில்  தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் கறுப்பு ஜூலை நினைவேந்தல் என்று நிறைவேற்றப்பட்டால் மட்டும் போதுமா? சிங்களதேசம் மாறப்போவது கிடையாது. தமிழர்களைச் சுயநலத்திற்காக பயன்படுத்துவார்கள். அதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொண்ட இனவெறிப் படுகொலை வன்முறை நடவடிக்கைகள் எல்லாம் தமிழர்கள் மீதான அரசியல் உரிமை மறுப்பதற்கும் ஒடுக்குமுறைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட உச்சகட்ட வன்முறைதான் கறுப்பு ஜூலை ஆகும்.

இலங்கையை ஆண்ட ஒவ்வொரு அரசும் தமிழர்கள் மீதான வன்முறைகளையும், படுகொலைகளையும் திணித்தது. தமிழ் அரசியலை ஒடுக்குவதே ஒரே விதியாக செயற்பட்டனர். இன்று வரை செயற்பட்டு வருகின்றனர். கறுப்பு ஜூலை வன்முறைகள் முடிவுற்றுப் போகவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

நம்முடைய இனம் என்னென்ன சிக்கல்களைச் சந்தித்தது. வலிகளைச் சுமந்து கொண்டு வந்திருக்கின்றது. பிரச்சினைகளைக் கடந்து வந்திருக்கிறது என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும். எப்படித் தமிழர்களுடைய பெருமையைச் சொல்கிறோமோ அதே போன்று நம்முடைய இனம் சந்தித்த துயரங்களையும், அடக்குமுறைகளையும் இனத்தை எதிர்த்து நின்றவர்களையும் நம் இனத்திற்கு துரோகம் செய்தவர்களையும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இனப்படுகொலை செய்த நம் முன்னோர்களை நாம் மறந்துவிடக்கூடாது. நினைவுகளை போற்றுவோம். மாற்றம் காண்போம். தமிழர் தாயகத்தை  மீட்போம்.

Leave a Reply