இனவழிப்புக்கு உள்ளான தமிழர்கள் நீதி கோரும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது-இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்

இனப் படுகொலை – Eelamaravar

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கை விடையத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்  கருத்து தெரிவித்த போது “இனவழிப்புக்கு உள்ளான தமிழர்கள் நீதி கோரும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது“ என வலியுறுத்தியுள்ளார்.

அவருடனான கலந்துரையாடல்,

கேள்வி1
இலங்கையின் இன்றைய அரசியல் மாற்றங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்

கொரோனா பெருந்தொற்று அமெரிக்க – சீன முரண்பாட்டை தீவிரப்படுத்தியது. இது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய – சீனப் போட்டியாக வடிவம் பெற்று சிறிலங்கா அதற்கான ஆடுகளமாக மாறும்,  அதில் இந்திய அரசின் நலனும் ஈழத் தமிழர்களின் நலனும் ஒரு நேர்க்கோட்டில் பொருந்திப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கோவிட் நலவாழ்வு நெருக்கடி பொருளியல் நெருக்கடியாக வடிவம் பெற்று சிங்கள மக்களின் போராட்டமாக வெடித்தது. தமிழர்களின் போராட்டத்திற்குப் பதிலாக இம்முறை சிங்களர்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி தமக்கு தேவையான பொருளியல் – பாதுகாப்பு உடன்படிக்கைகளை இந்தியா சிறிலங்காவிடம்  பெற்று கொண்டது. குறிப்பாக மார்ச் இறுதியில் நெடுந்தீவு, நயினா தீவு, அனலை தீவில் நீர்மின்னாற்றல் திட்டங்கள், கடற் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு மையம் ஆகிய குறிப்பிடத்தக்க உடன்படிக்கைகள் இவ்விருநாடுகளுக்கு இடையே போடப்பட்டன.

அது மட்டுமின்றி,  கோத்தபய பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இரணில் ஆட்சியில் இருப்பதன் மூலம் அமெரிக்கா- இந்திய கூட்டணியின் கை சிறிலங்காவில் ஓங்கியுள்ளது. இரணிலை அதிபராக்குவதற்குத் தமிழ்த் தலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டது இந்தியா. உண்மையில், இனி ஈழத் தமிழர்களின் உதவி இந்தியாவுக்கு தேவையில்லை என்ற நிலை தற்காலிமாக ஏற்பட்டுள்ளது. காணப்படும் நிலைமையில் உள்ள சாத்தியப்பாடுகளைக் கண்டறிந்து தமிழ் மக்களுக்கான நீதி, விடுதலையின் பாற்பட்டு சிந்தித்து உத்திகளை வகுக்கவும் மக்களை வழிநடத்தவும் வல்ல தமிழ்த் தலைமை இல்லாத வெற்றிடத்தை ”கோட்ட கோ கம” போராட்டக் காலம் வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இரணிலை அதிபர் பதவியில் நீடிக்க வைப்பது, கோத்தபயாவை இனவழிப்புக் குற்றங்களுக்கான பன்னாட்டுப் புலனாய்வில் இருந்து காப்பாற்றுவது, சிங்கள ஆளும் வகுப்பின்  அனைத்து தரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சிங்கள இடதுசாரிகளை ஒடுக்குவது, தமிழர்களுக்கு வெறுங்கையைக் காட்டி, காலத்திற்கும் பொறுத்திருக்கச் சொல்வது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

கேள்வி 2

இன்றைய சூழலில் 13 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க முயற்சித்தால் அது எந்தளவுக்கு பயனுள்ளதாக அமையும்?

பதில்

இந்திய இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் இன்று வரை ஏட்டளவில் இருப்பது இந்திய அரசின் இயலாமையையும் தோல்வியையும் காட்டுகிறது. வடக்கு கிழக்கு இணைப்பு நிரந்தரமானது என்று தலைவர் பிரபாகரனிடம் இராஜீவ் காந்தி வாய்மொழியில் உறுதியளித்ததாக ஒரு செய்தி உண்டு. ஆனால், இந்திய அரசால் வடக்குகிழக்கு இணைப்பை தக்க வைக்க முடியவில்லை. அத்திருத்தம் அமுலுக்கு வந்து இந்தியாவினால் வரதராஜப் பெருமாள் முதல்வராக அமர்த்தப்பட்டபோதே மாகாணசபைக்கு நிலம் மற்றும் காவல் அதிகாரம் வழங்கப்படவில்லை. 13 ஆவது திருத்தம் அரசியல் தீர்வு ஆகாது என்பதே விடுதலைப் புலிகள் முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரை அனைவரது நிலைப்பாடும் ஆகும். ஆயினும் இந்திய அரசு 13 ஆவது திருத்தத்தைக்கூட அமுல்படுத்த வைக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவ்வப்போது ஈழத் தமிழர்களில் ஒரு சாரார் அக்கோரிக்கையை எழுப்புவதுண்டு. கொள்கை உறுதி கொண்ட அரசியல் தலைமை இக்கோரிக்கையை எழுப்பினால் சிறிலங்கா அரசு எவ்வித குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்கும் அணியமாக இல்லை என்பதை அம்பலப்படுத்த அது உதவும். அதற்கப்பால் வேறு எதுவும் நடந்துவிடாது.

இதைவிட முக்கியமானது உடனடிக் கோரிக்கைகளை முன்வைப்பதாகும். இதன் மூலம்  யார் எந்த பக்கம்? யாருக்கு தமிழர் நலனில் அக்கறை உண்டு? சிங்கள அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை எல்லாம் முதலில் எடைபோட முடியும்.  திமுக, அதிமுக, இந்திய அரசு, சஜித் பிரேமதாசா என எல்லோரும் 13 பற்றி பேசுவார்கள். அது உதட்டளவில் சொல்வதே ஆகும். வடக்குகிழக்கு தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களப் படையை வெளியேற்றுவது, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தாலும் வளர்ச்சித் திட்டங்களின் பெயராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீளக் கொடுத்தல், தொகுதிகள் மறுசிரமைப்பு என்ற பெயரில் தமிழர் தாயகத்தை அழிக்கும் முன்னெடுப்புகளை மீளப் பெறுதல், காணாமலாக்கப்பட்டோருக்கான புலனாய்வு, வடக்கு கிழக்கு இணைப்பு என  அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் தேவைப்படாமல் அமைச்சரவையும் அதிபரும் முடிவு செய்யக்கூடிய உடனடிக் கோரிக்கைகளை இவர்கள் எழுப்பாதது ஏன்?

இந்த உடனடிக் கோரிக்கைகளைத் தான் முதலில் எழுப்ப வேண்டும். அதற்கிருக்கும் மக்கள் ஆதரவை உலகுக்கு காட்ட வேண்டும். தமிழர்களின் மீது அக்கறை இருப்போர் முதலில் இதைப் பேசட்டும், பிறகு அரசியல் தீர்வு பற்றி பேசலாம். மேலும், இனவழிப்புக்கு உள்ளான தமிழர்கள் நீதி கோரும் போராட்டத்தை கைவிட்டுவிடக் கூடாது. ஈழ விடுதலைக்கும் ஈழ விடுதலைக்குப் பின்னும் இனவழிப்புக்கு ஈடுசெய்ய வேண்டிய கடப்பாடு உலகுக்கு உண்டு. இந்தியா, அமெரிக்கா என உலகின் எந்த அரசும் இனவழிப்புக்கு நீதி கேட்கக் கூடாது என்று சொல்வதை தமிழர்கள் ஏற்கக் கூடாது. துப்பாக்கிகள், பீரங்கிகள், தலப் பிரதேசம் என எல்லாம் இல்லாமல் போன இடத்தில் தமிழர்கள் பெற்றுக் கொண்டது என்னவோ இனவழிப்புக்குள்ளானோர் என்ற அறவலிமையைத்தான். அதை அரசியல் வலிமையாக மாற்ற முடியும்.

கேள்வி-3

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இன்றைய சூழலில் ஈழத் தமிழருக்கு  உதவக் கூடிய வகையில் மத்திய அரசாங்கத்துக்கு எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியுமெனக் கருதுகின்றீர்கள்?

பதில்

சிறிலங்கா மீது பொருளியல் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்திய அரசு சிறிலங்காவுக்கு உதவி வருகிறது. அதுவும் இவ்வாண்டு மட்டும் சுமார் 4 பில்லியன் டாலர் உதவி செய்துள்ளது. இதைத் தமிழ்நாடு அரசாங்கம் கண்டித்திருக்க வேண்டும். இராசபக்சேக்களுக்கு எதிராக எழுந்த போராட்டத்தை வரவேற்றுப் போராடும் சிங்கள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். கூடவே, அவர்கள் திருடர்கள் மட்டுமல்ல கொலைகாரர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். உலகளாவிய மேலுரிமையைப் (Universal Jurisdiction) பயன்படுத்தி கோத்தபயாவைக் கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசுக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும். முந்தைய பதிலில் சொன்ன தமிழர்களின் உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசை நிரப்பந்திக்க இந்திய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் இப்போதும் கூட செய்ய முடியும்.

தமிழ்நாடு அரசுக்கு தன்னுடைய இறைமைப் பற்றிய விழிப்புநிலை கிடையாது. தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் அரசியல்மட்டம் என்பது உணவுப் பொட்டலம் அனுப்புவதோடு சுருங்கிப் போய்விடுகிறது. சனநாயகத்தினதும் நீதியினதும் உரிமையினதும் பாற் காட்ட வேண்டிய உணர்வுப்பூர்வ பற்று என்ற வளர்ச்சிநிலை இல்லை என்பது சமகாலத் துயரம்.  இனவழிப்புக்கு நீதி கோரி அறச் சீற்றத்தை வெளிப்படுத்தாத யாரும் தமிழர்களின் தலைமையாகிவிட முடியாது. வானளாவிய நினைவுச்சின்னங்களைவிடவும் முத்துக்குமாரின் கடிதமும் முள்வேலி முகாமும் பாலச்சந்திரன் புகைப்படமும், முள்ளிவாய்க்கால் முற்றமும்தான் வரலாற்றில் எவரையும் எடைபோடப் போகிறது. எனவே, இனியாவது ஈழத் தமிழர்களுக்கு நீதி, உரிமை, சனநாயகம் சார்ந்து தமிழ்நாட்டு ஆட்சித் தலைமை உள்ளத் தூய்மையோடு சிந்தித்துச் செயற்பட வேண்டும்.