உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமானதாக மாற்றுவதே நோக்கம் – ஜெனிவாவில் அறிவித்த இலங்கை அரசு

‘மோதலில் இருந்து மீதமுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயல்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை புதிய அரசாங்கம் உறுதி செய்யும்’ என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரில் நேற்று (25) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் வலுப்படுத்தப்படும்’. ‘அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு செயல்முறையை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க கட்டமைப்பின் வரையறைகள் தொடர்பில் உரிய பிரிவினருடன் விவாதிக்கப்படும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

‘அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கமாகும்’. ‘இலங்கையில் உள்ள சமூகங்களுக்குள் பதற்றங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும்’ என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

‘தொடர்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் மனித உரிமைகள் குறித்த உண்மையான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’. ‘உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப, உலகளாவிய சவால்களை சமநிலையான மற்றும் முழுமையான முறையில் எதிர்கொள்வதை இலங்கை ஆதரிக்க தயாராக உள்ளது’.

வலுவான தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புகள் மூலம், அரசுகள் தங்கள் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.