இலங்கை-2017 இன் உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை : ஐரோப்பிய ஒன்றிய பணிப்பாளர் 

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை தற்போது மீண்டும் மீளாய்வுக்கு வந்துள்ளது. 

இலங்கை அரசாங்கமானது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற துறைகளில் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாய தருணமாகவே இன்றைய காலகட்டம் காணப்படுவதாக தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப் பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்கள பணிப்பாளர் பயோலா பம்பலொனி, நெருக்கடியான சூழலில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது இன்றியமையாததாகும். இவற்றை எதிர்கொள்வதற்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையின் முயற்சிகள்

உண்மையாகவே இலங்கை மிக ஆழமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஆனால், அவற்றை வெற்றிகொள்வதற்கான ஒத்துழைப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும்.

கடந்த காலங்களில் காணப்பட்ட உள்நாட்டுப் போர், 2004 சுனாமி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய்களின்போது வழங்கப்பட்ட 1 பில்லியனுக்கும் அதிகமான உதவித் திட்டங்களை போன்று தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நம்பிக்கையுடன்  எதிர்பார்க்க முடியும்.

எவ்வாறாயினும், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை தற்போது இலங்கைக்கு  ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களின் இறக்குமதிக்கு குறிப்பிடத்தக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியமானது தொடர்ந்து நாட்டின் வர்த்தகம், சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துதல், இலங்கைக்கான மூலதனம் மற்றும் முதலீடுகளின் வாய்ப்புகளை பாதுகாத்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்தை வரவேற்றோம். ஏனெனில், இது பொருளாதார மறுமலர்ச்சித் திசையின் ஒரு முக்கியமான படியாகவே அமைகின்றது.

மேலும், கடன் வழங்கும் நாடுகளின் முறைசாரா குழுவாக கருதக்கூடிய பாரிஸ் கழகம் மற்றும் பாரிஸ் கழக உறுப்புரிமையற்ற நாடுகளும் ஜீ20 கட்டமைப்புக்கிணங்க, இலங்கை விடயத்தில் கடன் மறுசீரமைப்பு மற்றும் முழுமையான வெளிப்படைத்தன்மையில் செயல்பட பரிந்துரைக்கிறோம்.

அதேவேளை சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடு உரிமை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும்  இலங்கையர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதன் அடிப்படையில் தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது.

ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை

ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை என்பது மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஊக்குவிப்புகளுடன் கூடிய முன்னுரிமை வர்த்தக சலுகையாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் உட்பட பல பொருட்களுக்கான பூஜ்ஜிய இறக்குமதி வரி நிலையாகவும் கூறலாம்.

இலங்கைக்கு இந்த சலுகை கிடைக்கப்பெற்றுள்ளது. ஒரு நாடு ஜி.எஸ்.பி. ப்ளஸ் தகுதிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்யும் போது, அது 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்து செயற்படுத்த உறுதியளிக்கிறது.

2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தபோது சர்வதேச தரத்துக்கேற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவருவதற்கு உறுதியளித்தது. அதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை கணிசமான அளவில் திருத்துவதற்கு அல்லது அதை இரத்து செய்து, அதற்கு பதிலாக பொருத்தமான ஒரு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான உறுதிமொழியாகவே அமைந்தது. இதற்கான இலங்கையின் அர்ப்பணிப்புக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த அர்ப்பணிப்பு இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை தற்போது மீண்டும் மீளாய்வுக்கு வந்துள்ளது.

எனவே, இலங்கை அரசாங்கமானது அதன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற துறைகளில் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாய தருணமாகவே இன்றைய காலகட்டம் காணப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய ஆலோசனை

கடினமான மற்றும் கட்டமைக்கப்பட்ட சீர்திருத்த திட்டத்துக்காகவும், முக்கிய கடன் வழங்குநர்களுடனான சிக்கலான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்காகவும் பெரும்பாலான அரசியல் சக்திகள்  ஒன்றிணைந்திருப்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்.

மறுபுறம் இந்த நெருக்கடியான சூழலில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது இன்றியமையாததாகும்.

அதேவேளை சிறந்த மற்றும் செயல்திறன்களை உள்ளடக்கிய அரச நிர்வாகத்தை வளர்ப்பதும், நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதும் முக்கியமாகின்றது.

இலங்கை மக்களுக்கு ஆதரவாக இந்த முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும். இதனால், நாடு மிக விரைவில் ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த பொருளாதார நிலைமைகளுக்கு திரும்பும் என்றார்.

நன்றி-வீரகேசரி