மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி
ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவையான நிலையில் இன்று உள்ளனர் என்பதையும், 6.3 மில்லியன் மக்கள் அடுத்த நேர உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் வாழ்கின்றனர் என்பதையும் ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் உணவு, சுகாதாரம் ஆகிய இரண்டு துறைகளும், 1948ம் ஆண்டுக்குப் பின்னரான மிக மோசமான இன்றைய பொருளாதார நெருக்கடியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையையும், நிரம்பல் சங்கிலி சீர்குலைந்துள்ளதால் மிகத்தேவையாக உள்ள மருந்துகளையும் சாதாரண பயன்பாடுகளில் உள்ள மருந்துகளையும் கூட பெற்றுக்கொள்ள இயலாத நிலையையும், உடனடி அறுவைக் குணப்படுத்தல்களைக் கூடப் பின்போட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதால் மனித உயிராபத்து நிலைகள் அதிகரித்துச் செல்வதையும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செய்திட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய மக்களுக்கு உதவக் கூடிய வகையில் உலக மக்களிடம் நிதி உதவியினை அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளமை சிறிலங்கா அரசாங்கம் தன்னளவு பொருளாதாரத்தை இழந்து தனது குடிகளுக்குப் பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் வழங்க இயலாத, கடனில் மூழ்கிய அரசாகி விட்டதை உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் உலகின் நிதித்தரங்களைப் பட்டியலிடும் அனைத்துலக நிதிமுகாமைத்துவ நிறுவனம் சிறிலங்கா கடன்பட்ட நிதியினை திருப்பிச் செலுத்த இயலாத நாடாக அறிவித்துள்ளது. இது சிறிலங்காவுக்கு எந்தத் தனியார் நிறுவனங்களும் கடன் கொடுக்கும் தன்மையைக் குறித்த எச்சரிப்பாக அமைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிகளவான கடன்களை தான் தனது குடிகள் எனக் கூறிக்கொள்ளும் ஈழத்தமிழர்கள் மேலான, மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கு, அமெரிக்கா பிரான்சு ஆகிய நாடுகளில் உள்ள தனியார் நிதிஅமைப்புக்களின் சங்கங்களின் வழியாகவே பெருந்தொகையான கடனைப் பெற்றுள்ள நிலையில் அந்தத் தனியார் நிதி அமைப்புக்கள் தங்களின் கடனை மீளப்பெறுவதற்கான இயலுமான செயற்பாடுகளில் இறங்குவதை சிறிலங்காவால் தடுத்து நிறுத்த இயலாத இயல்புநிலை நடைமுறையில் தோன்றிவிட்டது.
சிறிலங்கா தான் நிதி உதவியாக இந்தியாவிடம் கெஞ்சிக் கூத்தாடிப் பெற்ற தொகைகளைக் கூட தான் பட்ட கடன்களின் வட்டிக்கும், நாட்டின் நாளாந்த வாழ்வுக்கான பொருட்களை ஏற்றி வரும் கப்பல் விமானக் கட்டணங்களுக்கும் செலுத்தி விட்டு உழைப்புக்கேற்ற கூலியும் திறமைக்கேற்ற வேலையும் பெற இயலாத நிலையில் தவிக்கும் மக்களிடம் இருந்து விலையேற்றங்கள் மூலமும் வரிகள் மூலமும் பணத்தைப் பெறும் மனிதாயமற்ற செயல்களை வேகப்படுத்தி வருகிறது.
அதே வேளை மக்கள் இந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்ப இயலாதவாறு அவர்களின் சனநாயக உரிமைகளை மறுத்து அரசபயங்கரவாதத்தைத் தனது படைப்பலம் கொண்டு கட்டவிழ்த்து வருவதைக் கொழும்பில் இன்றைய ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக அமைதி ஊர்வலம் நடத்த முனைந்த மக்களை ஊர்வலம் தொடங்கிய உடனேயே பல்லாயிரக்கணக்கில் படைகளைக் குவித்துத் தடுத்து நிறுத்திய இவ்வார நிகழ்வு உலகுக்கு உறுதி செய்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை எனக் கூறிக்கொண்டு தங்கள் வாழ்வுக்காகக் குரல் கொடுத்த காலிமுகத் திடல் அரகலிய போராட்டக்காரர்களை அரசபயங்கரவாதத்தின் மூலம் அவர்களின் மனிதஉரிமைகளை வன்முறைப்படுத்திச் சிறைகளில் விசாரணையின்றி தடுத்து வைத்துச் சித்திரவதை செய்து வருகிறது.
இந்த அரசபயங்கரவாதம் எல்லாமே இலங்கையில் ஈழத்தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட பொழுது அதனை ஐக்கிய நாடுகள் சபை கவனிக்காமல் இருந்ததமையும், 2009ம் ஆண்டு உலகின் 21ம் நூற்றாண்டின் மிகக் கொடுமையான இனஅழிப்பு என உலக வரலாறு பதிவுசெய்துள்ள முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்குப் பின்னரும் இதுவரை ஐக்கிய நாடுகள் சபை எந்த ஒழுங்காற்றலுக்கான அனைத்துலகச் சட்டங்களையும் சிறிலங்கா மேல் நடைமுறைப்படுத்தாது காலதாமதம் செய்வதுமே இன்று இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் நாட்டையே கொள்ளையடித்தமைக்கும்-மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது கொள்ளை அடிப்பதற்கும் மூலகாரணமாக உள்ளது.
இந்நேரத்திலும் கூட ரணிலின் ஆட்சி, இலங்கைத் தீவின் தேசமக்களாக உள்ள சிங்கள தமிழ் மக்களையும் குடிகளாக உள்ள முஸ்லீம், மலையக மக்களையும் ஒருங்கிணைத்து மக்கள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக் கூடிய சமத்துவத்தை அரசியலமைப்பால் உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பை உருவாக்க மறுக்கிறது. அந்த சமத்துவம் உறுதி செய்யப்பட்டாலே இலங்கைத் தீவின் சுதந்திரமும் சகோதரத்துவமும் மீளுருவாக்கம் பெற்று ஒவ்வொரு இனமக்களும் தங்களுக்கான கண்ணியமான வாழ்வைப் பேணிய நிலையில் இலங்கைத் தீவின் பொருள்வளத்தை அதன் மூலவளமும் ஆள்பலமும் இணைக்கப்படுவதன் வழி குறுகிய காலத்தில் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். இந்த நடைமுறை உண்மையை மறுத்து வெளிநாடுகளின் உதவியால் எவர் இலங்கைத் தீவை கொள்ளையடித்தார்களோ அவர்களைப் பாதுகாக்கும், அவர்களால் நியமிக்கப்பட்ட நிழல் அரசாகவே ரணில் அரசும் நடைமுறையில் செயற்படுகிறது.
இந்நிலையில் வளம் நிறை இலங்கைத் தீவின் மூலவளங்களும் மனித வளங்களும் சந்தை இணைப்புக்களும் சமனான முறையிலும் சமத்துவமானவர்கள் என்ற உரிமையுடனும் எவரும் சந்தையில் சுதந்திரமாக நுழையவும் வெளியேறவும் கூடிய முறையில் ஒன்றிணைக்கப்பட்டாலே இலங்கைத் தீவில் வாழும் அனைத்து மக்களதும் பொருளாதாரச் சுதந்திரம் அரசியல் சுதந்திரம் சமுகச் சுதந்திரம் ஆன்மிகச் சுதந்திரம் மீளுருவாக்கம் பெறும். சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு இயற்றப்பட்டால்தான் இந்திய மொழியில் கூறுவதனால் எல்லா மக்களதும் கண்ணியமான வாழ்வு மீளும். இந்தக் கண்ணியமான வாழ்வே இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒரு ஆண்டல்ல இரு ஆண்டு உறுதி செய்துள்ள இந்தியா இதற்கான அழுத்தங்களைக் கொடுக்கத் தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் செயற்பட வேண்டிய நேரமிது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.