இலங்கையில் கடந்த செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 209,334 பேருக்கு காசோலைகள் மற்றும் நிதியுதவி என்பனவும் 101,064 பேருக்கு ஏனைய உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைவரம், நிதியொதுக்கீடு மற்றும் வழங்கப்பட்டுள்ள உதவிகள் என்பன பற்றிய உலக உணவுத்திட்டத்தின் செப்டெம்பர் மாத மதிப்பீட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில்,
சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், உணவு, எரிபொருள் ஆகியவற்றின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டின் விளைவாக மக்கள் தமது அன்றாடத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதில் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இது கடந்த இருவருடகாலமாக கொவிட் – 19 வைரஸ் பரவலினால் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதுடன், 2019 ஆம் ஆண்டு முதல் குறைந்த நடுத்தர வருமானம்பெறும் நாடு என்ற ரீதியில் அடையப்பட்ட அபிவிருத்திகளில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.
மேலும் இத்தீவிர பொருளாதார நெருக்கடியானது உணவுப்பாதுகாப்பின்மீது தொடர்ச்சியான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதேவேளை இந்நெருக்கடி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் மோசமடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
கொழும்பு மற்றும் அதனைச்சார்ந்த நகர்ப்புறப்பகுதிகளில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துச்செல்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு அவசியமான அவசர உதவிகளை வழங்கும் செயற்திட்டம் கடந்த ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட 209,344 பேருக்கு 4.2 மில்லியன் டொலர் பெறுமதியான காசோலைகள் மற்றும் நிதிசார் உதவிகள் வழங்கப்பட்டிருப்பதுடன் 101,064 பேருக்கு அவசியமான ஏனைய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று 2022 ஒக்டோபர் – 2023 மார்ச் வரையான 6 மாதகாலப்பகுதியில் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியினளவு 28.86 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 10 இலட்சம் (ஒரு மில்லியன்) பாடசாலை மாணவர்களுக்கு 3 மாதகாலத்திற்கு உரியவாறான போசணையுடன்கூடிய உணவை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அவசியமான 1,475 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் 775 மெட்ரிக் தொன் இரும்புச்சத்தூட்டப்பட்ட அரிசி என்பன விநியோகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இச்செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.