வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று (26) புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் அங்கு கூடியிருந்த இந்து மக்களிடையே அதிர்ச்சியும் எதிர்ப்பும் நிலவியதுடன் சம்பவ இடத்தில் பெருமளவிலான காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விபரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே காவல்துறையினரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் பி. சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், வழிபாட்டிற்கு வரும் பொதுமக்களை வழியில் மறித்து இடையூறு செய்யாமல், அவர்கள் சுதந்திரமாகச் சென்று இறைவனை வழிபட அனுமதிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.



