தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுக்கு இடையே கொள்கை ரீதியான தீர்மானங்களில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாக கூறப்படுகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான இரண்டு சர்ச்சைக்குரிய சட்ட மூலங்கள் தொடர்பில் இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வெளியிட்ட கருத்துக்களை அடுத்தே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான இரண்டு சர்ச்சைக்குரிய சட்ட மூலங்களையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கண்டிப்பாக நிறைவேற்றியே தீரும் என்று பிரதி அமைச்சர் வட்டகல குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் உறுதியாக உள்ளதால், இந்த சட்டங்களை நிறைவேற்றுவதில் தங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இருப்பினும், இந்த சட்ட மூலங்கள் தொடர்பாக ஜனாதிபதி முற்றிலும் மாறுபட்ட, வகையிலான கருத்தொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனநாயக ரீதியாக எதிர்ப்புகள் காணப்படுமாயின் பொதுமக்களுடனும் சிவில் அமைப்புகளுடனும் உரிய முறையில் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களைப் பெறாமல் தன்னிச்சையாக எந்தவொரு புதிய சட்டத்தையும் அரசாங்கம் நிறைவேற்றாது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்வதாக கூறுகின்ற நிலையில், அவரது அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு சட்டங்களை கட்டாயம் நிறைவேற்றுவோம் என்று கூறுவது முற்றிலும் முரண்பாடானது என சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு அதில் அங்கம் வகிப்பவர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசாங்கம் தனக்கு கிடைத்துள்ள ‘மூன்றில் இரண்டு’ பெரும்பான்மை அதிகாரப் பலத்தை மக்கள் கருத்துக்கு அப்பால் தன்னிச்சையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.



